ஷா ஆலாம், ஜூலை 27 - சிலாங்கூரில் பொதுமக்கள் மத்தியில் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் விழிப்புணர்வு இன்னும் கவலைக்கிடமான அளவிலேயே உள்ளது.
இதனால் மறுசுழற்சி செய்யக்கூடிய பல பொருட்கள் வீணாகக் கழிவுகளை அகற்றும் மையத்திற்கே சென்றுசேரும் சோகம் அரங்கேறி வருகிறது என கே.டி.இ.பி வெஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ராம்லி முகமது தாஹிர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் பிளாஸ்டிக், காகிதம் மற்றும் பெட்டிகள் போன்ற மறுசுழற்சிப் பொருட்களைத் தரம் பிரிக்கும் ஆர்வம் வெறும் இருபது புள்ளி ஏழு விழுக்காடு குடும்பங்களிடம் மட்டுமே காணப்படுவதாக அவர் வேதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அனைத்து வகையான குப்பைகளையும் ஒரே கறுப்பு நிற பிளாஸ்டிக் பையில் போட்டு அப்படியே அப்புறப்படுத்துவதே தற்போதைய காலத்தின் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் குப்பைக் கூளங்களாக மாறுவது மிகப்பெரிய இழப்பு என்றும், இந்த நிலையை நாம் அனைவரும் இணைந்து உடனடியாக மாற்றியே தீர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த விழிப்புணர்வை அரசாங்கத்தின் பொறுப்பு மட்டும் இல்லை, மாறாக சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் கூட்டுப் பொறுப்பாக ஏற்றுச் செயல்பட வேண்டும்.
மேலும், பள்ளிவாசல்கள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிகள் மற்றும் சமூக மையங்கள் போன்ற இடங்களில் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்போடு மறுசுழற்சி திட்டங்களை முழு வீச்சில் முன்னெடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வசதிக்காக எட்டு உள்ளூராட்சி மன்றப் பகுதிகளில் மறுசுழற்சிப் பொருட்களைச் சேகரிப்பதற்கான பிரத்தியேக அட்டவணைகளையும் கே.டி.இ.பி நிறுவனம் தற்போது வழங்கி வருகிறது.
இத்திட்டத்திற்கு நாளுக்கு நாள் மக்களிடம் கிடைக்கும் வரவேற்பு அதிகரித்து வருவதோடு, உணவு மற்றும் இதர கழிவுகளைப் பிரித்தெடுக்கும் விகிதம் வரும் காலங்களில் படிப்படியாக உயரும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே, மக்களின் மனநிலையும் சிந்தனையும் மாறுவதே நிலையான மற்றும் தூய்மையான சுற்றுப்புறச் சூழலை உருவாக்குவதற்கான முதன்மைக் அளவுகோலாக அமையும் என்பதை அவர் ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார்.







