ஷா ஆலாம், அக் 26 : காற்றின் தரம் சீரடைந்து வருவதை அடுத்து, சிலாங்கூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) வழக்கம்போல் இயங்குமென சிலாங்கூர் மாநில கல்வித் துறை தெரிவித்தது.
எனினும், மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென சிலாங்கூர் கல்வித் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
"பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிய ஊக்குவிக்கப்படுகின்றனர்.
தங்களின் பிள்ளைகளின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால், அது குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரிகள் விதித்துள்ள வழிமுறைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அனைத்துத் தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்று சிலாங்கூர் கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
ஏதேனும் புதிய தகவல்கள் இருந்தால், அவை சிலாங்கூர் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மற்றும் பள்ளிகள் மூலமாக அறிவிக்கப்படும்.
இதற்கிடையில், இன்று மதியம் 3 மணி நிலவரப்படி சிலாங்கூரின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் சீரான நிலையில் பதிவானது.
பெட்டாலிங் ஜெயா 50 என்ற காற்று தூய்மைக்கேட்டு குறியீட்டையும் (IPU), ஷா ஆலம் 45, ஜோஹான் செத்தியா 43, கிள்ளான் 42 மற்றும் பந்திங் 30 என்ற அளவுகளையும் பதிவு செய்தன.
கோலா சிலாங்கூர் 53 என்ற குறியீட்டுடன் மிதமான அளவில் பதிவாகியதாக, மலேசிய காற்று தூய்மைக்கேடு குறியீட்டு மேலாண்மை முறையின்(APIMS) தரவு காட்டுகின்றது.





