சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயாவில் நாளை ( அக் 21) பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும்

20 அக்டோபர் 2026, 10:04 AM
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயாவில் நாளை ( அக் 21) பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும்

ஷா ஆலாம், அக் 20 : சிலாங்கூரில் சில பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்துள்ள போதிலும், இம்மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை,அதாவது அக்டோபர் 21-ஆம் தேதி வழக்கம் போல் இயங்கும் என மாநில கல்வித் துறை தெரிவித்தது.

எனினும், புகைமூட்டம் காரணமாக அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

காற்று மாசினால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மேலும், புகைமூட்ட நிலை தங்களது பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் என்று கவலைப்படும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால், இந்தத் தகவலைப் பள்ளி நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, பேராக், பினாங்கு மற்றும் பகாங் ஆகிய பிற மாநிலங்களிலும், நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அந்தந்த மாநில கல்வித் துறைகள் அறிவித்துள்ளன.

கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் மலாக்காவில் பள்ளிகள் இயங்கும் என்றாலும் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நெகிரி செம்பிலானில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு நூறைத் தாண்டினால் வகுப்பறைக்கு வெளியிலான நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்பதோடு, இக்காலக்கட்டத்தில் திட்டமிடப்பட்டிருந்த இறுதித் தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, பள்ளிகளால் மறுதேதி குறிக்கப்படும்.

பகாங் மாநிலத்தின் ரொம்பின், பெந்தோங் மற்றும் கேமரன் மலை ஆகிய பகுதிகளில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்; ஆனால் வெளிப்புற நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும்.

பினாங்கு மாநிலத்தில் மாணவர்கள் முகக்கவசம் அணியவும், போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பள்ளிகளில் குடிநீர் இருப்பு போதுமானதாக இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பேராக் மாநிலத்திலும் முகக்கவசம் அணிய ஊக்குவிக்கப்படுவதோடு, பெற்றோர்கள் பள்ளிக்குத் தகவல் தெரிவித்துவிட்டு பிள்ளைகளை அனுப்பாமல் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக, அனைவரும் புகைமூட்ட நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து, அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வகைpendidikan

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.