சுற்றுலா துறையை ஊக்குவிக்க மோரிப்பில் 4 நட்சத்திர தங்கும் விடுதி

22 அக்டோபர் 2026, 8:04 AM
சுற்றுலா துறையை ஊக்குவிக்க  மோரிப்பில் 4 நட்சத்திர தங்கும் விடுதி
சுற்றுலா துறையை ஊக்குவிக்க  மோரிப்பில் 4 நட்சத்திர தங்கும் விடுதி

ஷா ஆலம், அக் 22 : உள்ளூர் சுற்றுலாத் துறையையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், கோலாலங்காட்டில் உள்ள மோரிப் கடற்கரைப் பகுதியில் புதிய நான்கு நட்சத்திர தங்கும் விடுதி ஒன்று கட்டப்படவுள்ளது.

இந்த தங்கும் விடுதிக்கான கட்டுமானம் நிறைவடைய இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகுமென சிலாங்கூர் சுற்றுலாத் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் தெரிவித்தார்.

மோரிப் பகுதியை சிலாங்கூரின் முக்கியச் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்று என அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் சுற்றுலாத் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம்

அந்தத் திட்டத்தின் கீழ் மோரிப்பில் உள்ள கோல்ஃப் கிளப்பை மேம்படுத்துவதோடு, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல பகுதிகளை மறுசீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம், மாநில அரசு தனது பர்மோடாலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் (PNSB) நிறுவனம் மூலமாக மொரிப் மறுசீரமைப்பு மற்றும் மறுமேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியது.

இதன் ஆரம்பக்கட்ட மொத்த வளர்ச்சி மதிப்பு (GDV) RM850 மில்லியன் ஆகும்.

லிம் சியோங் ஹாய் கேபிட்டல் பெர்ஹாட் (Lim Seong Hai Capital Berhad) மற்றும் செரியேமாஸ் டெவலப்மெண்ட் (Seriemas Development Sdn Bhd) ஆகிய நிறுவனங்களின் கூட்டுறவோடு செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் இவ்வாண்டே தொடங்குமென மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி , இதற்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இதன் முதல் கட்டமாக, 142 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஸ்ரீ மோரிப் கோல்ஃப் அண்ட் கன்ட்ரி கிளப் (Sri Morib Golf and Country Club) பகுதி, 18-குழிகள் கொண்ட அனைத்துலக தரம் வாய்ந்த கோல்ஃப் மைதானமாக மேம்படுத்தப்படும்.

இந்த மைதான மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைய ஈராண்டுகள் ஆகுமெனவும் அமிருதின் ஷாரி குறிப்பிட்டிருந்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.