குவாலா லங்காட், செப் 5 : 850 மில்லியன் ரிங்கிட் தொடக்க மேம்பாட்டு வளர்ச்சியைக் கொண்டு வரக் கூடும் எனும் இலக்கில் மொரிப் பகுதி உயிர்ப்பிக்கப்படவுள்ளது.
சிலாங்கூர் மாநில அரசு, சிலாங்கூர் பெர்மோடாலான் ( Permodalan Negeri Selangor Berhad) நிறுவனத்தின் மூலம் அப்பகுதியில் புதிய சீரமைப்பு , மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
லிம் சியோங் ஹாய் கேபிட்டல் நிறுவனமும் (LSH Capital செரிஎமாஸ் டெவலப்மெண்ட் ( Seriemas Development ) நிறுவனமும் இணைந்து இவ்வாண்டு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
முதற்கட்டமாக 142 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஸ்ரீ மொரிப் கோல்ஃப் அண்ட் கன்ட்ரி கிளப் பகுதி மேம்படுத்தப்படும்.
இப்பகுதி 18 கோல்ஃப் துளைகள் மற்றும் பார் 72 கொண்ட அனைத்துலகத் தரத்திலான கோல்ஃப் மைதானமாக தரம் உயர்த்தப்படும் .
இந்த மறுசீரமைப்புப் பணிகள் நிறைவுபெற ஈராண்டுகள் ஆகுமென சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.

பத்து ஆண்டுகால முதன்மைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த மொரிப் மறுசீரமைப்புத் திட்டத்தில், கோல்ஃப் மைதான மேம்பாடு மட்டுமின்றி சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் அடங்கிய கலப்பு மேம்பாட்டுத் திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மொரிப் பகுதியை வெறும் வார இறுதி சுற்றுலாத் தலமாக மட்டும் வைக்காமல், தங்கும் விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு முழுமையான ஒருங்கிணைந்த கடலோர சுற்றுலா நகரமாக மாற்றியமைக்கும்.
மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க மொரிப் கடற்கரை பகுதிக்கு இத்திட்டம் புதிய பொலிவைத் தருவதோடு, சிலாங்கூர் மாநிலத்திற்குப் பெரிய சமூக-பொருளாதார நன்மைகளையும் வழங்கும் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

இவற்றுடன் சேர்த்து, PETRA அமைப்பின் கீழ் கடற்கரையோரத்தை வலுப்படுத்தும் திட்டப் பணிகளும் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவடைந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கத் தயாராக உள்ளது.
முன்னதாக, மந்திரி பெசார் அமிருடின் ஷாரி இன்று இங்குள்ள மொரிப் கடற்கரையில் , ஸ்ரீ மொரிப் கோல்ஃப் மைதானம் மற்றும் மொரிப் சுற்றுலா நகரத்தின் மறுசீரமைப்பு மற்றும் மறுமேம்பாட்டுத் திட்டத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழாவைச் சிறப்பித்து வைத்தார்.







