ஷா ஆலாம், அக். 21 – சிலாங்கூரில் நாளை, அக்டோபர் 22ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், புகைமூட்டம் நிலவி வருவதால் மாணவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரோக்கியமற்ற காற்றைச் சுவாசிப்பதால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளைக் குறைக்க பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள் முகக்கவசம் அணியுமாறு ஊக்குவிக்கப்படுவதாகச் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை தெரிவித்தது.
மேலும், தங்களது பிள்ளைகளின் உடல்நலம் குறித்து கவலைப்படும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கும் நிபந்தனையுடன் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சுற்றுச்சூழல் துறை (JAS) வெளியிடும் தற்போதைய காற்று மாசுக் குறியீட்டு (IPU) அளவுகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







