சுய லாபத்திற்கு அரச அந்தஸ்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்: உறவினர்களுக்குச் சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை

20 அக்டோபர் 2026, 11:45 AM
சுய லாபத்திற்கு அரச அந்தஸ்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்: உறவினர்களுக்குச் சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை

கிள்ளான், அக் 20 : சுய லாபத்திற்காக தங்களது அரச குடும்ப அந்தஸ்தைப் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்ற வேண்டாம் என சிலாங்கூர் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த அரச அந்தஸ்து எவருக்கும் தாங்கள் நினைத்தபடி செயல்படும் உரிமையை வழங்கவில்லை என்றும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சட்டத்தை மதித்து, அனைத்து விதிகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.

சிலாங்கூர் சுல்தானின் வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி, ஆலாம் ஷா அரண்மனையின் மஹ்கோத்தா திடலில் இன்று நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

சிலாங்கூர் அரச குடும்பம் மற்றும் நிறுவனத்தின் நற்பெயரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் நடத்தையும் ஒட்டுமொத்த அரச குடும்பத்தின் மீதான பொதுமக்களின் பார்வையைப் பாதிக்கும் என்பதால், தங்களது செயல்களில் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

சமுதாயத்தோடு பழகுவதும், கடமைகளை நிறைவேற்றுவதும் அரச குடும்பத்தின் கண்ணியத்தையும் நேர்மையையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரச குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் வலுவான பிணைப்பைப் பேண வேண்டும், பகைமைகளைத் தவிர்க்க வேண்டும் மற்றும் சிறிய கருத்து வேறுபாடுகள் பெரிய பிரிவினையை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சுல்தான் கேட்டுக்கொண்டார்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது வார்த்தைகளிலும் நடத்தையிலும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், பரஸ்பர புரிதல் மற்றும் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தில் சுமார் 1,200 அரச குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் சுல்தான் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பு குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதற்கும், சிலாங்கூர் அரச நிறுவனத்தின் கண்ணியத்தைக் காப்பதற்கும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பாக அமைந்ததாகக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நொராஷிகின் மற்றும் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.