ஷா ஆலாம், அக். 20 – மலேசியாவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயதை 16இலிருந்து 18ஆக உயர்த்தும் பரிந்துரை குறித்து, விரிவாக ஆராய வேண்டும் எனப் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இந்த வயது வரம்பை உயர்த்துவதால் சில நன்மைகள் இருந்தாலும், அதேவேளையில் புதிய சிக்கல்களும் ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, பள்ளியில் பயிலும் மாணவர்கள் 18 வயதை அடையும் வரை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் பெற முடியாத சூழல் உருவானால், அதிகமான இளைஞர்கள் முறையான உரிமமின்றி மோட்டார் சைக்கிள்களை ஓட்டும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற Transport Expo Asia (TXA) கண்காட்சியைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்ர்.
இந்தப் பரிந்துரை இன்னும் ஆய்வுக் கட்டத்திலேயே இருப்பதாகவும், இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்தோணி குறிப்பிட்டார். இந்த விவகாரம் சில ஆண்டுகளுக்கு முன்பும் விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இதனிடையே, சிறுவர்கள் மற்றும் வயது குறைந்த இளைஞர்கள் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயதை 18ஆக உயர்த்த வேண்டும் என்று மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (MIROS) தலைவர் பேராசிரியர் டாக்டர் வோங் ஷாவ் வூன் முன்னதாகப் பரிந்துரைத்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து மேலும் விளக்கமளித்த அந்தோணி லோக், தற்போதைய குறைந்தபட்ச வயது வரம்பு 16ஆக இருந்தபோதிலும், வயது குறைந்தவர்கள் உரிமமின்றி மோட்டார் சைக்கிள்களை ஓட்டும் பிரச்சனை ஏற்கெனவே நிலவி வருவதைச் சுட்டிக்காட்டினார்.







