புக்கிட் மெர்தாஜாம், அக். 20 – நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண்களுக்கு குறிப்பாகக் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக, மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (KPWKM) இவ்வாண்டு சுமார் RM1 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
இதனை மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நிதியுதவி, சட்ட ஆலோசனை, ஆரம்பக்கட்ட தலையீடு மற்றும் தற்காலிகத் தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி, அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவது இந்த முயற்சியின் நோக்கம் என்றார்.
இதற்காக அரசு சார்பற்ற அமைப்புகளுடன் (NGO) இணைந்து பல்வேறு ஆதரவுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான துன்புறுத்தல்களை அடையாளம் காணவும், சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உள்ள உரிமைகளைப் புரிந்துகொள்ளவும், ஆபத்தான குடும்பச் சூழலிலிருந்து வெளியேறுவதற்குத் தேவையான பாதுகாப்பையும் உதவியையும் நாடவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் நான்சி தெரிவித்தார்.
பினாங்கு மாநில அளவிலான 2026ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ‘Road to Eliminate Violence Against Women (EVAW)’ நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்த பின்னர் அவர் இதனைக் கூறினார்.

இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிதியுதவித் திட்டம், அடுத்த ஆண்டில் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்பான இடத்தில் தற்காலிகமாகத் தங்குவதற்காக, ஒவ்வொரு மாநிலத்திலும் இடைநிலைத் தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் நான்சி தெரிவித்தார். இந்த வசதிகள் அரசு சார்பற்ற அமைப்புகளின் ஒத்துழைப்புடன் வழங்கப்படுகின்றன.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு ஆலோசனைச் சேவைகள், உளவியல் மற்றும் சமூக ஆதரவு, அரசாங்க அமைப்புகளுக்கான பரிந்துரைச் சேவைகளையும் அமைச்சு வழங்கி வருகிறது.
இதனிடையே, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய மூத்தோர் பராமரிப்புச் சிறப்பு மையங்கள் (NICE) தொடர்பில் கருத்துரைத்த அவர், நாட்டின் பராமரிப்புப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், மூத்த குடிமக்களுக்கான பராமரிப்புச் சேவைகளை மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வழங்குவதற்கும் இந்த முயற்சி உதவும் என்றார்.







