ஜோகூர் பாருவில் வீட்டுப் பணிப்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் காணொளி வைரல்: பொதுமக்கள் கடும் கண்டனம்

14 ஜூன் 2026, 2:50 AM
ஜோகூர் பாருவில் வீட்டுப் பணிப்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் காணொளி வைரல்: பொதுமக்கள் கடும் கண்டனம்

ஷா ஆலம், ஜூன் 14: ஜோகூர் பாருவில் தம்பதியர் எனக் கருதப்படும் இருவர் தங்களின் வீட்டுப் பணிப்பெண்ணைக் கொடூரமாக அடித்து, முகத்தில் அறையும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி, பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த அதிர்ச்சியூட்டும் காணொளியில், பாதிக்கப்பட்ட பணிப்பெண் நாற்காலியில் அமர்ந்திருக்கும் வேளையில், அவரது முதலாளி எனக் கருதப்படும் ஒரு நபர் அவரை முகத்தில் அறைந்தும், ஓங்கி குத்தியும் கொடூரமாகத் தாக்குவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

அந்த நபர் தொடர்ந்து தாக்கியதால் வலி தாங்க முடியாமல் அந்தப் பணிப்பெண் கதறி அழும் சத்தம் கேட்டும், எவ்வித இரக்கமும் இன்றி அந்த நபர் அவரைத் தொடர்ந்து தாக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட பெண்ணின் முதலாளியின் இல்லத்திலேயே நடந்துள்ளதாகத் தெரிகிறது.

சமூக ஊடகங்களில் இக்காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயலைச் செய்த தம்பதியருக்கு எதிராகக் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டு தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சட்டம் தன் கையில் இருப்பதாக நினைத்துக் கொண்டு இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்ட அந்தப் தம்பதியர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகவும் கடுமையான முறையிலும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து ஜோகூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாட் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இணையத்தில் வைரலாகி வரும் இக்காணொளி குறித்துத் தங்கள் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.

இச்சம்பவம் தொடர்பாக ஜோகூர் மாநிலக் காவல்துறை ஏற்கனவே தங்களின் முதற்கட்டத் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Risikan) விசாரணைகளைத் தொடங்கிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.