சிலாங்கூர் பட்ஜெட் 2027: செந்தோசாவில் புதிய பொதுச் சந்தை, காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

19 அக்டோபர் 2026, 2:11 AM
சிலாங்கூர் பட்ஜெட் 2027: செந்தோசாவில் புதிய பொதுச் சந்தை, காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

ஷா ஆலாம், அக். 19 – மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் துரிதமான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, செந்தோசா பகுதியில் நிரந்தரப் பொதுச் சந்தை மற்றும் காவல் நிலையம் அமைப்பதற்கான திட்டங்களைச் சிலாங்கூரின் 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தற்போது செந்தோசா மக்கள் காலை சந்தைகள் மற்றும் இரவு நேரச் சந்தைகளையே பெரிதும் நம்பியிருப்பதால், அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான வசதிகளுடன் கூடிய நிரந்தரப் பொதுச் சந்தை அமைப்பது அவசியமாகியுள்ளதாகக் குணராஜ் தெரிவித்தார்.

மீடியா சிலாங்கூர் தயாரிக்கும் 'SKOP' நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், செந்தோசா பகுதியில் முழுமையான வசதிகளைக் கொண்ட பொதுச் சந்தை இதுவரை இல்லாத நிலையைச் சுட்டிக்காட்டினார்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்

“இதுகுறித்து ஊராட்சி தரப்பினரிடம் கேட்டபோது, பொருத்தமான இடத்தைத் தேடி வருவதாக தெரிவித்தனர். ஆனால், சந்தை அமைப்பதற்குத் தேவையான நிலம் கிடைப்பதில் சிக்கலும் உள்ளது,” என்றார் குணராஜ்.

இதற்கிடையில், நிரந்தரச் சந்தை அமைப்பதற்கான நிலம் கிடைக்கும் வரை இடைக்கால நடவடிக்கையாக, கிள்ளான் மாநகராட்சி மன்றம் (MBDK) சில திறந்தவெளிப் பகுதிகளில் கூடுதல் காலைச் சந்தைகள் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இந்தத் தற்காலிக ஏற்பாடுகள் மட்டுமே மக்களின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்காது.

“பொருத்தமான நிலம் கிடைக்காவிட்டால், பொதுச் சந்தை அமைப்பதற்காக மாநில அரசு, மேம்பாட்டாளர்கள் அல்லது நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம். இந்த வசதி உள்ளூர் மக்களுக்கு மிகவும் அவசியமானது,” என்று அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, செந்தோசா பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகப் புதிய காவல் நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் குணராஜ் முன்மொழிந்துள்ளார்.

தற்போது அப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான காவல்துறை அதிகாரிகளை கொண்ட காவல் குடில் மட்டுமே செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மக்கள் தொகை அதிகரித்து வருவதுடன், குடியிருப்பு மற்றும் வர்த்தக மேம்பாட்டுத் திட்டங்களும் விரிவடைந்து வருவதால், அங்கு பாதுகாப்புத் தேவைகளும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, இப்பகுதியில் கூடுதல் காவல்துறை அதிகாரிகளை நியமிக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் ஒரு காவல் நிலையத்தைக் கட்டுவதற்கு உதவ வேண்டும் என்றார்.

சிலாங்கூர் மாநிலத்தின் 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தை, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வரும் நவம்பர் 13ஆம் தேதி மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.