ஷா ஆலாம், அக். 19 – வேலையிழந்த அல்லது வருமானம் குறைந்துள்ள நடுத்தர வருமானம் பெறும் M40 பிரிவைச் சேர்ந்தவர்கள், அரசாங்க உதவிகளைப் பெறுவதற்கான தங்களின் தகுதியை மறுபரிசீலனை செய்ய உடனடியாக மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதித் துணை அமைச்சர் லியூ சின் தொங் இதனைத் தெரிவித்தார். குடும்பங்களின் நிதிநிலை மாறியுள்ள சூழலில், M40 பிரிவினர் அரசாங்க உதவிகளுக்கான தகுதி பரிசீலனையிலிருந்து விடுபட்டுவிடாமல் இருக்க மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் தினமும் திறந்திருப்பதாக அவர் கூறினார்.
தேசிய முன்னணி (BN) சார்பில் கோலா பிலா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அட்னான் அபு ஹசான், M40 குடும்பங்களின் தற்போதைய நிதிநிலைக்கு ஏற்ப இலக்கு அடிப்படையிலான அரசாங்க உதவிகளை மறுமதிப்பீடு செய்வதற்கான நடைமுறை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த லியூ சின் தொங், நாட்டின் வேலையின்மை விகிதம் தொடர்ந்து நான்கு விழுக்காட்டுக்குக் கீழ் நிலவுவதாகக் குறிப்பிட்டார். இதனை அரசாங்கத்தின் சாதனைகளில் ஒன்றாகவும், அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் அம்சமாகவும் அவர் விவரித்தார்.

இதற்கிடையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும் M40 பிரிவினரின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனிநபர் வருமான வரியில் வழங்கப்படும் கழிவுக்கான உச்சவரம்பு, கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக RM9,000 இலிருந்து RM12,000 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
இதன் மூலம் நடுத்தர வருமானம் பெறுவோரின் வரிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், குறிப்பிட்ட வரிக்குட்பட்ட வருமான வரம்புகளுக்கு உட்பட்ட குடியிருப்பாளர்களுக்கான தனிநபர் வருமான வரி விகிதத்தை ஒரு விழுக்காட்டுப் புள்ளி குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அதேவேளையில், வருமான வரிக் கழிவுக்குத் தகுதியான செலவினங்களின் வரம்பும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு, பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியருக்கான பராமரிப்புச் செலவுகள், விளையாட்டுக் காலணிகள், கல்வி மற்றும் பிள்ளைகளுக்கான தனிப்பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றுக்கான செலவுகளும் இதில் உள்ளடக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
முதல் வீட்டை வாங்க விரும்புவோருக்கு உதவும் வகையில், RM500,000 வரை விலையுள்ள வீடுகளுக்கான கடன் ஒப்பந்தங்கள் மற்றும் உரிமை மாற்ற ஆவணங்களுக்கு முழுமையான முத்திரைத் தீர்வை விலக்கு வழங்கவும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

RM500,000-க்கும் அதிகமாகவும் RM750,000 வரை விலையுள்ள வீடுகளை வாங்குவோருக்கு, முதல் RM500,000 மதிப்புக்கான பகுதிக்கு முழுமையான முத்திரைத் தீர்வை விலக்கு வழங்கப்படும். மீதமுள்ள வீட்டின் விலைக்கு விதிக்கப்படும் முத்திரைத் தீர்வையில் 50 விழுக்காடு விலக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வருமானம் பெறும் M40 குடும்பங்களும் அரசாங்கத்தின் பல்வேறு உதவித் திட்டங்கள் மற்றும் நிதிச் சலுகைகள் மூலம் தொடர்ந்து பயனடைவதை உறுதிசெய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.







