கோலா சிலாங்கூர், அக். 18 – சிலாங்கூர் அரசின் புளூபிரிண்ட் உதவித் திட்டத்தின் மூலம், கோலா சிலாங்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 கிராமப்புற சிறு வணிகர்கள் தங்களது அன்றாட வியாபார நடவடிக்கைகளைச் சீராக மேற்கொள்வதற்கும், வருமானத்தை அதிகரிப்பதற்கும் புதிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த உதவி, அன்றாட விற்பனையை மட்டுமே நம்பி வாழ்வாதாரத்தை ஈட்டும் சிறு வணிகர்கள் தங்களது தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை பெற்று கொள்ள வழிவகுத்துள்ளது.

அந்த வகையில், கடந்த 20 ஆண்டுகளாகத் தனது கணவருடன் இணைந்து ரொட்டி சானாய் கடையை நடத்தி வரும் சரினா மூசாவுக்கு, சமையல் அடுப்பு, விற்பனைக் கடை அமைப்பு, நாற்காலிகள் மற்றும் மேசைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த உதவி தமது தொழிலை மேம்படுத்துவதற்குப் பெரிதும் துணையாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இரண்டு தசாப்தங்களாகத் தொழில் நடத்தி வரும் தமக்கு, இதற்கு முன்னர் விவசாயிகள் அமைப்பிடமிருந்து (PPK) மாவு அரைக்கும் இயந்திரம் மட்டுமே உதவியாகக் கிடைத்ததாகக் குறிப்பிட்ட சரினா, தற்போது புளூபிரிண்ட் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட RM10,000 மதிப்பிலான உபகரண உதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

புதிதாகக் கிடைத்துள்ள உபகரணங்கள் தனது வணிக நடவடிக்கைகளை மேலும் சீராக முன்னெடுக்க உதவுவதுடன், குடும்பத்தின் வருமானத்தையும் அதிகரிக்க வழிவகுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, தங்களது தொழிலையே முழுமையாக நம்பி வாழ்வாதாரத்தை ஈட்டும் கிராமப்புறச் சிறு வணிகர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தை இந்தத் திட்டம் நிறைவேற்றி வருகிறது.
இதனை கோலா சிலாங்கூர் மாவட்டத்திற்கான (2026) புளூபிரிண்ட் மற்றும் ஐ-சீட் உபகரணங்கள் வழங்கும் விழாவில் சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்புத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.

இந்த உதவித் திட்டத்தின் விண்ணப்பச் செயல்முறையிலும், விண்ணப்பதாரர்களின் தகுதிகளை ஆராய்வதிலும் கிராமத் தலைவர்களும் பெங்கூலுக்களும் முக்கியப் பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் பரிந்துரைகளும் கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரே விண்ணப்பங்கள் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படுகின்றன என்றார்.
இதற்கிடையில், சிலாங்கூர் வறுமை ஒழிப்புக்கான புளூபிரிண்ட் உதவித் திட்டம் கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்த வருமானம் பெறும் சிறு தொழில்முனைவோருக்கு அவர்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்காக இயந்திரங்கள் மற்றும் தொழில் உபகரணங்கள் வாங்க அதிகபட்சம் RM10,000 வரை உதவி வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.







