கோலாலம்பூர், அக் 10 - ASEM எனப்படும் மலேசிய மேம்பட்ட குறைக்கடத்தி ( செமிகண்ட்க்டர் ) அகாடமி மூலம் பயிற்சி பெற்ற 850 பொறியாளர்களும் 100 விழுக்காடு வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்;
அதோடு அவர்களின் எதிர்பார்க்கப்படும் மாதச் சம்பளம் 5,000 ரிங்கிட்டுக்கும் அதிகமாகும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளுக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
கோலாலம்பூர், கிரெண்ட் யாட் விடுதியில் இன்று நடைபெற்ற 'சிலாங்கூர் ஏஐ மற்றும் செமிகண்டக்டர் உச்சநிலை மாநாட்டின்' (AiSEM) தொடக்க விழாவில் கலந்துகொண்டு அவர் பேசினார்.

செமிகண்டக்டர் தொழில்துறையின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காகத் திறமையான ஆட்பலத்தை மேம்படுத்துவதில் சிலாங்கூர் அரசு எடுத்து வரும் தீவிர முயற்சிகளை அது பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கு முன்பு 'ஏஐ நுசந்தாரா' (AI Nusantara) என்று அழைக்கப்பட்ட இந்த அகாடமி, மலேசியாவின் செமிகண்டக்டர் தொழில்துறைக்கான ஆட்பலத்தை உருவாக்கித் தரும் முதன்மை இயந்திரமாகச் செயல்பட மாநில அரசால் வழிநடத்தப்பட்டு வருகிறது.
மாநிலத்தின் ஐ.சி டிசைண்ட் பார்க் (IC Design Park ) 1 மற்றும் 2 ஆகியவற்றில் தற்போது 20 நிறுவனங்களும் 409 பொறியாளர்களும் பணியாற்றி வருவதாக இங் ஸீ ஹான் குறிப்பிட்டார்.
இது இவ்வாண்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட 400 பொறியாளர்கள் என்ற இலக்கை விட அதிகமாகும்.

இதனிடையே, மலேசிய செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள 150 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தேசிய முதலீட்டு நிதிக்குச் சிலாங்கூர் மாநில அரசு தனது பங்காக 50 மில்லியன் ரிங்கிட்டை வழங்கும் என்றும் இங் ஸீ ஹான் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த நிதியத்தில் கசானா நேஷனல் மற்றும் பினாங்கு மாநில அரசாங்கமும் இணைந்துள்ளன.
செமிகண்டக்டர் தொழில்துறையில் சிலாங்கூர் மாநிலம் பினாங்கிற்குப் போட்டியாகச் செயல்படுவதாகக் கூறப்படுவதை மறுத்த அவர், இரு மாநிலங்களும் வெவ்வேறு பிரிவுகளில் கவனம் செலுத்தி ஒருவருக்கொருவரின் பலத்தை பூர்த்தி செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
பினாங்கு உற்பத்தி, பொருத்துதல் மற்றும் சோதனை ஆகியவற்றில் முன்னணியில் உள்ள வேளையில், சிலாங்கூர் ஐசி டிசைண்ட் (IC Design) மற்றும் சிப் கண்டுபிடிப்புகளில் (Chip Innovations) முன்னணியில் உள்ளதாகவும், இவ்விரு மாநிலங்களும் எப்போதும் சிறந்த பங்காளிகளாகவே செயல்படும் என்றும் அவர் விளக்கினார்.








