எதிர்கால பொருளாதாரத் தேவைகளை எதிர்நோக்க சிலாங்கூரின் உயர் தாக்கத் துறைகள் மேம்படுத்தப்படும் - டத்தோ மந்திரி புசார்

11 ஜூன் 2026, 3:36 AM
எதிர்கால பொருளாதாரத் தேவைகளை எதிர்நோக்க சிலாங்கூரின் உயர் தாக்கத் துறைகள் மேம்படுத்தப்படும் - டத்தோ மந்திரி புசார்

சிங்கப்பூர், ஜூன் 11: எதிர்கால பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில், சிலாங்கூர் மாநிலத்தில் தற்போது தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் குறைக்கடத்தி (Semiconductor), ஒருங்கிணைந்த சுற்று வடிவமைப்பு (IC Design) மற்றும் புதிய தலைமுறை உற்பத்தித் தொழில் உள்ளிட்ட உயர் தாக்கத் துறைகளின் மதிப்பு மேலும் தரம் உயர்த்தப்படும் என்று சிலாங்கூர் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் மின்னணுவியல் (E&E), விண்வெளித் துறை, உயிர் அறிவியல், மின்சார வாகனங்கள் (EV) மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளின் வளர்ச்சியை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு இணையாக இந்த மேம்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

அண்மையில், கடந்த ஜூன் 9-ஆம் தேதியன்று இன்வெஸ்ட் சிலாங்கூர் (Invest Selangor) மற்றும் சிங்கப்பூர் ஓசிபிசி (OCBC Singapore) வங்கி இணைந்து ஏற்பாடு செய்திருந்த முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த உயர் தாக்கத் துறைகள் இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) பொருளாதார உருமாற்றத்தில் ஒரு புதிய கட்டத்தைப் பிரதிபலிக்கும் என்றும், அதோடு ஆசியான் சந்தையில் நீண்ட கால வளர்ச்சியை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவைப் பொறுத்தவரை சிலாங்கூர் மாநிலமே இந்த உருமாற்றத்தில் முன்னிலையில் திகழ்வதாகவும், நாட்டின் நுழைவாயிலாக மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆசியான் மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் சந்தைக்கான முக்கிய மையமாக சிலாங்கூரை உருமாற்றுவதே தங்களின் முக்கிய இலக்கு என்றும் அவர் விவரித்தார்.

மேலும், சிலாங்கூர் மாநிலம் பரந்த அளவிலான முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தரவு மையங்கள் (Data Centres), தொழில்நுட்பம் மற்றும் நிதிச் சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவித்து வருவதாகவும் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மாநில அரசின் அர்ப்பணிப்பு என்பது வெறும் விளம்பரப்படுத்துதலோடு மட்டும் நின்றுவிடாமல், முதலீட்டுச் செயல்பாடுகளை எளிதாக்குவது, வணிக விரிவாக்கத்திற்கு ஆதரவளிப்பது மற்றும் தொழில்துறைக்குத் தேவையான திறமையாளர்களை உருவாக்குவது என முதலீடுகளின் வெற்றியை உறுதி செய்யும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உற்பத்தித் துறை, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்துதல் அல்லது ஆசியானில் புதிய சந்தைகளை ஆராய்தல் என எந்தவொரு துறையாக இருந்தாலும், சிலாங்கூர் மாநிலம் எப்போதும் ஒரு நம்பிக்கைக்குரிய மூலோபாய பங்காளியாகச் செயல்படத் தயாராக உள்ளது என டத்தோ மந்திரி புசார் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.