கோலாலம்பூர், அக்டோபர் 14: சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு (SIBS), ஆசியான் வட்டாரத்துக்கான ஒரு நுழைவாயிலாகத் திகழும் தனது பங்கையும் தாண்டி, உள்ளூர் மற்றும் இளம் தொழில்முனைவோர் தங்களின் வர்த்தகத்தை வட்டாரத்துவ சந்தைகளுக்கு விரிவுபடுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமீர் ஷா வலியுறுத்தினார்.
இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC), SIBS மாநாட்டின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் இளவரசர் உரையாற்றினார்.
இந்த மாநாட்டின் வெற்றி, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதில் மட்டுமல்ல; மாறாக, தென்கிழக்காசியாவின் சந்தைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை குறிப்பாக உள்ளூர் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கு ஏற்படுத்துவதிலும் அடங்கியுள்ளது என்றார்.

"நமக்கு முன் இருக்கும் கேள்வி நாம் ஆசியானுக்கான நுழைவாயிலை உருவாக்க முடியுமா என்பது மட்டுமல்ல, அந்த நுழைவாயில் யாருக்காக உருவாக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். அதற்கான பதில் மிகவும் தெளிவானது. நாம் இப்போது எதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதை எதிர்காலத்தில் வாரிசாகப் பெறப்போகும் அடுத்த தலைமுறைக்காகவே இது உருவாக்கப்பட வேண்டும்," என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

பல தொழில்முனைவோரிடம் வெற்றியை அடைவதற்கான திறமையும் தகுதியும் இருந்தபோதிலும், வர்த்தக கட்டமைப்பு, சந்தைக்கான அணுகல் மற்றும் வளர்ச்சிக்கான தன்னம்பிக்கை ஆகியவற்றில் அவர்கள் இன்னும் சவால்களை எதிர்கொண்டு வருவதாக தெங்கு அமீர் ஷா சுட்டிக்காட்டினார்.
"ஆசியான் வட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் திறமையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்களுக்கு சரியான வர்த்தகத் தொடர்புகளோ, சந்தைக்கான வாய்ப்புகளோ அல்லது தங்களின் முதல் அடியை எடுத்து வைப்பதற்கான தன்னம்பிக்கையோ கிடைப்பதில்லை," என்றார்.

எனவே, சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த அதிகமான தொழில்முனைவோர் தங்களின் வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்தி, ஆசியான் சந்தைக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.









