கோலாலம்பூர், அக் 14 : முதலீட்டாளர்கள் சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்பலத் திறன்களை நன்கு புரிந்துகொள்வதற்கும், தங்களின் வர்த்தக விரிவாக்கத்தைத் திட்டமிடுவதற்கும் உதவும் நோக்கத்தில், மாநிலத்தின் மனிதவளத் திறன் குறித்த முக்கிய அறிக்கை ஒன்றை சிலாங்கூர் அரசாங்கம் இன்று வெளியிட்டது.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்று வரும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் (SIBS) ஒரு பகுதியாக, முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ங் சீ ஹான் அந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
'உலகளாவிய ஆட்பலத் திறன் மையமாக சிலாங்கூரின் ஆற்றலை மேம்படுத்துதல்' (Elevating Selangor’s Potential as a Global Talent Powerhouse) என்ற தலைப்பிலான அந்த அறிக்கை, ரான்ஸ்டாட் மலேசியா (Randstad Malaysia) என்ற மனிதவள ஆட்சேர்ப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டதாக, இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஹசன் அசாரி இட்ரிஸ் தெரிவித்தார்.

சிலாங்கூரின் முதலீட்டுச் சூழலை வலுப்படுத்துவதற்காக இன்று அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று முக்கிய முயற்சிகளில் இந்த அறிக்கையும் ஒன்றாகும்.
முதலீட்டு ஊக்குவிப்பு கையேடு (Investment Promotion Booklet) வெளியீடு மற்றும் விருப்பமான தொழில்துறை பூங்கா (PIP) சான்றிதழ்கள் வழங்குதல் ஆகியவை மற்ற இரு முயற்சிகளாகும்.
இந்த கையேடு முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் போது மாநிலத்தின் தொழில்துறை பூங்காக்கள், பொதுப் பயன்பாடுகள், மனிதவள இருப்பு மற்றும் தற்போதைய முதலீட்டாளர்களின் வாக்குமூலங்களை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படும் என்று ஹசன் விளக்கினார்.

அதே வேளையில், PIP- விருப்பமான தொழில்துறை பூங்கா திட்டம் என்பது, முதலீட்டாளர்களுக்கு சிலாங்கூரின் தொழில்துறை பூங்காக்களின் ஈர்ப்பினை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அத்திட்டத்தின் கீழ் பல்வேறு தொழில்துறை பூங்கா மேம்பாட்டாளர்கள் தங்களின் பூங்காக்களை விளம்பரப்படுத்த அழைக்கப்படுவார்கள்.
இன்வெஸ்ட் சிலாங்கூரின் முதலீட்டுப் பயணங்களில் அவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதுடன், அஸ்ட்ரோ அவானி (Astro Awani) ஊடகத்துடன் இணைந்து தொழில்துறை பூங்காக்களை மேம்படுத்தும் ஒரு குறிப்பிட்ட திட்டத்திலும் அவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

முதலீட்டாளர்கள் தங்களின் வர்த்தகத்தை நடத்துவதற்குப் பொருத்தமான இடங்களும் ஆட்பல ஆதரவும் தேவை என்பதால், இந்த மூன்று முயற்சிகளும் ஒன்றையொன்று பூர்த்தி செய்து முதலீட்டுச் சூழலை முழுமையாக்குவதாக ஹசன் மேலும் கூறினார்.
இன்வெஸ்ட் சிலாங்கூர் ஏற்பாடு செய்துள்ள இந்த 10-வது SIBS -சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு சனிக்கிழமை வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெறுகிறது.








