SIBS 2026: RM8.17 பில்லியனைத் தாண்ட இலக்கு, மூன்று புதிய தூண்கள் அறிமுகம்

11 மார்ச் 2026, 3:46 AM
SIBS 2026: RM8.17 பில்லியனைத் தாண்ட இலக்கு, மூன்று புதிய தூண்கள் அறிமுகம்

ஷா ஆலாம், மார்ச் 11-இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாட்டில் (SIBS) 2026, கடந்த ஆண்டின் RM8.17 பில்லியன் சாத்தியமான வர்த்தகப் பரிவர்த்தனை மதிப்பை மிஞ்சுவதற்கு இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் இலக்கு கொண்டுள்ளது.

மாநிலத்தின் பன்முக முதலீட்டுச் சூழலை வலுப்படுத்த, 10-வது SIBS மாநாட்டில் மூன்று புதிய தூண்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலீட்டுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸி ஹான் தெரிவித்தார்.

"முதல் தூண், சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையம் (STDC) மற்றும் உலகப் புகழ்பெற்ற Deutsche Messe AG-இன் துணை நிறுவனமான ஹானோவர் ஃபேர்ஸ் ஆசியா பசிபிக் இணைந்து ஏற்பாடு செய்யும் 'சிலாங்கூர் டெக்ஸ்பியர்' மாநாடு ஆகும்.

இது தொழில்நுட்பத் திறமைகள் மற்றும் தொழில்துறை புத்தாக்கங்களில் கவனம் செலுத்தும்," என்றார்."இரண்டாவது தூண், சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் பொருளாதாரக் கழகம் (SIDEC) ஏற்பாடு செய்யும் சிலாங்கூர் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குறைக்கடத்தி (Semiconductor) மாநாடு ஆகும்.

மூன்றாவது தூண், வனிதா பெர்டாயா சிலாங்கூர் (WBS) ஏற்பாடு செய்யும் சிலாங்கூர் அனைத்துலக சுகாதாரப் பராமரிப்பு கண்காட்சி ஆகும்," என்று SIBS 2026-க்கான செயல்திட்டத்தை நேற்று இங்கு அறிமுகப்படுத்திய பின்னர் அவர் கூறினார்.

இந்தத் தூண்கள், ஏற்கனவே உள்ள சிலாங்கூர் ஆசியான் வர்த்தக மாநாடு (SABC) மற்றும் சிலாங்கூர் தொழிற்பூங்கா மற்றும் முதலீட்டுக் கண்காட்சி (SPARK) போன்ற நிகழ்ச்சிகளுடன் இணையும் என்று ஸி ஹான் குறிப்பிட்டார்.

"இந்த ஆண்டு, SIBS முக்கிய தொழில்துறைகளில் கவனம் செலுத்தும் உயர் மட்ட கருத்தரங்கான சிலாங்கூர் முதலீட்டு மன்றத்தையும், சிலாங்கூரில் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளுக்கான திறமை இடைவெளியைக் குறைக்க சமூகப் பாதுகாப்பு அமைப்புடன் (PERKESO) இணைந்து நடத்தப்படும் ஒரு பிரத்யேக தொழில் கண்காட்சியான சிலாங்கூர் வேலைவாய்ப்பு இணைப்புத் திறமைக் கண்காட்சியையும் அறிமுகப்படுத்துகிறது," என்றார்.

2015-இல் சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சி (SIE) என அறிமுகப்படுத்தப்பட்ட SIBS, ஆரம்ப ஆண்டுகளில் சுமார் RM 200 மில்லியனாக இருந்த அதன் சாத்தியமான பரிவர்த்தனை மதிப்பு, 2024-இல் RM13.85 பில்லியனாக உயர்ந்தது என்றும் அவர் கூறினார்.

இந்த மாநாடு இதுவரை RM30.56 பில்லியன் மொத்த சாத்தியமான பரிவர்த்தனை மதிப்புக்கு வழிவகுத்துள்ளது, இது மலேசியாவின் முக்கிய பொருளாதார இயந்திரமாக சிலாங்கூரின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.

இதற்கிடையில், இன்வெஸ்ட் சிலாங்கூர் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஹாசான் அஸ்ஹாரி இட்ரிஸ், SIBS@ASEAN சிலாங்கூரை ஒரு பிராந்திய இணைப்பாளராக நிலைநிறுத்தும் முயற்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது என்றார்."ஜூலை 2026-இல் பாண்டுங் பதிப்பிற்கு சிலாங்கூரைத் தளமாகக் கொண்ட சுமார் 50 நிறுவனங்களை அழைத்துச் செல்ல நாங்கள் எதிர்பார்க்கிறோம். சிலாங்கூர் மற்றும் மேற்கு ஜாவா இடையே உள்ள பொதுவான பொருளாதார அம்சங்களைக் கருத்தில் கொண்டு, இந்த முயற்சி உள்ளூர் வணிகங்கள் உலகளவில் போட்டித்தன்மையுடனும் பொருத்தமுடனும் இருப்பதை உறுதிசெய்ய உதவும்," என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.