ஜெனீவா, டிச 5 — கடந்த ஆண்டு உலகளவில் மலேரியா சம்பவங்கள் 282 மில்லியனாக அதிகரித்துள்ளன. இது 2023 உடன் ஒப்பிடும்போது ஒன்பது மில்லியன் அதிகம். எத்தியோப்பியா, மகடகாஸ்கர் மற்றும் யேமனில் ஏற்பட்ட பரவல்களே இந்த உயர்வுக்குக் காரணமாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டில் மலேரியாவால் சுமார் 610,000 பேர் உயிரிழந்துள்ளனர் என WHO தெரிவித்துள்ளதாக ஜெர்மன் பத்திரிகை நிறுவனம் தகவல் வெளியிட்டது.
எத்தியோப்பியாவில் மலேரியா மருந்துகளுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளதாகவும், மகடகாஸ்கரில் வெள்ளப்பெருக்கு மற்றும் காலநிலை மாற்றமே இந்நிலைமைக்கு காரணமாக இருந்ததாகவும் கூறப்பட்டது. யேமனில் தொடர்ச்சியான மோதல்கள் சுகாதார அமைப்பை பாதித்துள்ளன.
கொசு வலைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் முன்னெச்சரிக்கை மருந்துகள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் கூடுதல் 2.3 மில்லியன் தொற்றுகளையும் 14 மில்லியன் மரணங்களையும் தவிர்த்துள்ளத என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்ப்புத் திறன் கொண்ட நோய்க்கிருமிகள் முக்கியமாக ஆப்பிரிக்காவில் பரவி வருகின்றன. அதிமட்டுமில்லாமல், மலேரியாவால் மிகவும் பாதிக்கப்பட்ட கண்டம் இதுவாகும்.
அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிலிருந்து உதவி நிதி கடுமையாக குறைக்கப்பட்டிருப்பது, பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக WHO எச்சரித்துள்ளது.
மலேரியா நோய்க்கிருமி என்பது கொசுக்களால் பரவும் ஒரு பராசைட் ஆகும். இது காய்ச்சல் மற்றும் மூட்டு வலியை ஏற்படுத்தும், ஆனால் சிகிச்சை அளிக்கக்கூடியது. இது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் அதன் வீரியம் மேலும் மோசமாகி வருகிறது.


