ரியாத், அக் 12 - சவுதி தலைநகரின் விமான நிலையம் இவ்வாரம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்ற வார இறுதியில் நடந்த கொடூரமான ஹூதி தாக்குதல்களுக்குப் பிறகு ரியாத் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், பல விமான நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தின் பிற்பகுதி வரை தங்களது விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன.
இதனிடையே, ஜெட்டாவிற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான கிங் காலித் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சவுதி பொது விமான போக்குவரத்து ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அந்த இராட்சியத்தில் நடந்த மிக மோசமான கொடூரத் தாக்குதலாகும்.
அதனைத் தொடர்ந்தே அந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த மற்றொரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் கிட்டத்தட்ட ஒரு டஜன் மக்கள் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல்கள் சவுதி வரலாற்றில் பல ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய இடையூறாக அமைந்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதி முழுவதும் நிலவும் மோதல்கள் மற்றும் லாபத்தை பாதிக்கும் அதிகப்படியான ஜெட் எரிபொருள் விலை ஆகியவற்றால் ஏற்கனவே தவித்து வரும் விமான போக்குவரத்து துறைக்கு இது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆயுதமேந்திய மோதல்களில் பொது விமான போக்குவரத்து ஒரு இலக்காக மாறுவது குறித்த கவலைகளையும் இது எழுப்பியுள்ளது.
பொது விமான போக்குவரத்து மீது இந்த அளவிலான தொடர்ச்சியான தீவிர தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும் என்று விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கும் உறுப்பினர் அடிப்படையிலான அமைப்பான OPSGROUP-இன் நிறுவனர் மார்க் ஜீ கூறினார்.
விமானப் போக்குவரத்தை கண்காணிக்கும் ஃப்ளைட்ராடார்24 தரவுகளின்படி, திங்கள் கிழமையன்று விமானங்கள் இந்த நகரத்தைத் தவிர்த்துச் செல்வது காட்டப்பட்டது.
இருப்பினும், நாட்டின் மேற்கு கடற்கரையில் உள்ள முதன்மை மையமான ஜெட்டாவில் விமானங்கள் சவுதி வான்வெளியைக் கடந்து வழக்கம்போல தரையிறங்கி வருகின்றன.
விமான போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான சிரியம் கருத்துப்படி, அனைத்து சவுதி விமான நிலையங்களிலும் விமான ரத்து விகிதம் தற்போது 46.4%-ஐ எட்டியுள்ளது.
இந்த இடையூறு காரணமாக ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் உள்ள விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளன.







