ரியாத், செப் 19 - சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் முக்கிய விமான நிலையத்திற்கு அருகில் சனிக்கிழமையன்று , ஒரு பெரிய புகை மூட்டத்தைக் காண முடிந்தது. அதற்கு முன்னதாக வெடிச்சத்தங்கள் கேட்டன.
ஏமனின் ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியா அதன் தலைநகரைச் சுற்றி இரவு நேரத்தில், ஆபத்து எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள், ரியாத் விமான நிலையத்திற்கு அருகில் ஒரு பெரிய கரும்புகை வான்நோக்கி எழுவதைக் காட்டின.
அதன் முன்பகுதியில் விமான நிலைய நெடுஞ்சாலை, முக்கிய முனையம் மற்றும் பிற வசதிகள் தெரிந்தன. வீடியோவின் ஒரு பகுதியில், எரிபொருள் கலன்கள் போலத் தோன்றிய அமைப்புகளுக்குப் பின்னால் இருந்து தீப்பிழம்புகள் எழுவதும் காணப்பட்டது.
இந்த புகை மூட்டம் மற்றும் இரவு நேர எச்சரிக்கைகள் குறித்து ராய்ட்டர்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு சவூதி அரசாங்கத்தின் ஊடக அலுவலகத்திடம் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை.
சவூதி பொது பாதுகாப்புத் துறை, ரியாத் மற்றும் தலைநகருக்கு கிழக்கே உள்ள அல்-கார்ஜ் (Al-Kharj) நகரத்தில் வான்வழித் தாக்குதல்கள் நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறி இரவு நேரத்தில் தொலைபேசி மூலம் எச்சரிக்கையை அனுப்பியது.
பின்னர் சனிக்கிழமை காலையில் ஆபத்து நீங்கியதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
அமெரிக்கா-ஈரான் போர் தொடங்கிய பிறகு இவ்வாண்டில் ரியாத்தில் சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தாலும், ஜூலை மாதத்தில் ஹூதி அமைப்பினருடன் மோதல் தீவிரமடைந்த பிறகு விடுக்கப்பட்ட முதல் எச்சரிக்கை இதுவாகும்.
ஏமனின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் மற்றும் வடக்கின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹூதிகள், ஜூலை மாதம் ரியாத்திற்கு எதிராக கடல்வழி முற்றுகையை அறிவித்ததில் இருந்து சவூதி அரேபியா மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
செங்கடலில் உள்ள சவூதி கப்பல்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.







