வாஷிங்டன், மார்ச் 3 — சவுதி அரேபியாவின் தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆளில்லா விமான (Drone) தாக்குதலுக்கு உள்ளானதாகச் சவுதி பாதுகாப்பு அமைச்சகம் இன்று அதிகாலை அறிவித்துள்ளதாக அனடோலு அஜான்சி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கச் சமூக ஊடகமான X தளத்தில் அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் தூதரகத்தின் மீது இரண்டு ஆளில்லா விமானங்கள் மோதியுள்ளன.
இந்தத் தாக்குதலால் தூதரகக் கட்டிடத்தில் சிறிய அளவிலான தீ விபத்தும், லேசான சொத்து சேதமும் ஏற்பட்டுள்ளன; எனினும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது. கடந்த சனிக்கிழமை அதிகாலை ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்கு மத்தியில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியம் முழுவதும் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவ இலக்குகளை நோக்கி ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.








