ஷா ஆலம், நவ 19 - எதிர்வரும் ஆண்டில் தொடங்க உள்ள சிலாங்கூர் `Frontliner Apprenticeship` (செல்ஃபா) திட்டம், குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில், தாதியர்கள் பற்றாக்குறையை தீர்க்க உதவும்.
உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு பெற்ற பல தாதியர் மாணவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்யத் தேர்வு செய்வதே நிதி பற்றாக்குறை பிரச்சனைக்கு காரணம் என சிலாங்கூர் முன்னாள் சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் காலிட் இப்ராஹிம் கூறினார்.
“தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் இருந்து வேறுபட்டவை. மலேசியா சுகாதார அமைச்சகத்திற்கு சொந்தமான பயிற்சி மையம் இருந்திருந்தால், அதன் மாணவர்கள் அரசாங்கத்தில் மட்டும்தான் பணிபுரிவர்.
“பல பல்கலைக்கழகங்களோ அல்லது கற்றல் மையங்களோ முன்னிலை பணியாளர்கள் பாடத்திட்டங்களை வழங்குகின்றன. ஆனால், அவை பட்டப்படிப்பு அளவில் இருப்பதால், மாணவர்கள் சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வேலை செய்ய முடியும்.
“டிப்ளமோ வைத்திருக்கும் முன்னிலை பணியாளர்கள் குறைவாக உள்ளனர். எனவே, சிலாங்கூரின் இந்த முடிவு நாடு போதுமான தாதியர்கள் பெற்றிருக்க நல்ல முயற்சியாகும்,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் சிறந்த சேவையை வழங்க தாதியர் மாணவர்களையே நம்புகின்றன என யூஐடிஎம் மருத்துவ விரிவுரையாளருமான டாக்டர் காலிட் கூறினார்.
“இந்த மருத்துவமனைகள் கல்லூரிகள் அல்லது தனியார்/அரசுப் பல்கலைக்கழகங்களில் இருந்து வரும் (நர்சிங்) பட்டதாரிகளை நம்புகின்றன. முன்கூட்டியே முன்னிலை பணியாளர்களை உருவாக்குவதில் செல் கேட் ஓர் ஆரம்பப் படியை எடுத்து வருகிறது,” என்றார் அவர்.
செல்ஃபா திட்டத்திற்கு RM4.74 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை 2026 சிலாங்கூர் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார். இது திறமையான, போட்டித்திறன் கொண்ட சுகாதார முன்னிலை பணியாளர்களைக் கல்வி நிதியுதவி மூலம் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
செல்ஃபா திட்டம் மாணவர்களுக்கு யுனிசெல் (Unisel) வழங்கும் நர்சிங், பிசியோதெரபி, மருத்துவ இமேஜிங் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பங்கள் போன்ற மூன்று ஆண்டு சுகாதார டிப்ளமோ படிப்புகளில் சேர வாய்ப்பு வழங்குகிறது.




