கோத்தா கினாபாலு, ஆகஸ்ட் 15 — நாட்டில் நிலவும் தாதியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க சுகாதார அமைச்சு தனது சுகாதாரப் பணியாளர் சீர்திருத்தத்தின் கீழ் மூன்று முக்கிய திட்டங்களை வலுப்படுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தாதியர் பட்டதாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், தொழில் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், அத்துடன் நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் நிர்வாகத்தில் அதிக தன்னாட்சியை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை அந்த மூன்று முக்கிய உத்திகள் என டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மட் கூறினார்.
தாதியர்களின் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முதல் திட்டத்தின் கீழ், 2025ஆம் ஆண்டு முதல் தாதியர் பயிற்சியாளர்களுக்கான சேர்க்கை ஆண்டுக்கு 3,000 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
ஆண்டுக்கு மேலும் 2,000 பயிற்சியாளர்களை அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களிடம் ஒப்படைத்து பயிற்சி வழங்க சுகாதார அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும், குவாந்தான், கோலா திரங்கானு, மூவார் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் உள்ள நான்கு ILKKM கிளைகள் 2027ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் மீண்டும் திறக்கப்படும்.
இதன் மூலம் மேலும் சுமார் 500 பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி வழங்கும் வசதி உருவாகும்.
இதன் மூலம், தாதியர் டிப்ளோமா பயிற்சித் திட்டத்தின் மொத்த வருடாந்திர பயிற்சி திறன் 5,500 பேராக அதிகரிக்கும் என டாக்டர் சுல்கிஃப்ளி தெரிவித்தார்.
இரண்டாவது திட்டத்தில், பணியாளர்கள் தங்களது பணியிடங்களை நீண்ட காலத்துக்கு விட்டு விலகாமல் புதிய திறன்களையும் நிபுணத்துவத்தையும் மேம்படுத்திக்கொள்ள, இம்மாதம் 15 பணியிடப் பயிற்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
அத்துடன், சமூக தாதியர்களுக்கு தொழில் முன்னேற்றப் பாதையை விரிவுபடுத்தும் வகையில், Transition Diploma எனப்படும் மாற்றுநிலை டிப்ளோமா வழியாக அவர்கள் தகுதிபெற்ற தாதியர்களாக மாறுவதற்கான வாய்ப்பும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
மூன்றாவது திட்டத்தின் கீழ், ILKKM தாதியர் டிப்ளோமா பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து, மலேசிய தாதியர் வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து பட்டதாரிகளும் நேரடியாக நிரந்தரப் பணியிடங்களில் அமர்த்தப்படுவார்கள் என அவர் கூறினார்.
மேலும், 2026ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி முதல் பணியாளர் நிர்வாகத்தில் சுகாதார அமைச்சுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிர்வாக நடைமுறையில், தேவையற்ற தாமதங்களைக் குறைப்பதுடன், புதிய பட்டதாரிகளை சுகாதாரத் துறையில் நேரடியாகப் பணியமர்த்தும் நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.







