இந்தோனேசிய காட்டுத் தீயால் எல்லை தாண்டும் புகைமூட்டம்: துணைப் பிரதமர்

11 அக்டோபர் 2026, 1:06 PM
இந்தோனேசிய காட்டுத் தீயால் எல்லை தாண்டும் புகைமூட்டம்: துணைப் பிரதமர்

ஷா ஆலாம், அக். 11 — இந்தோனேசியாவின் சுமத்ரா, கலிமந்தான் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் உருவாகும் எல்லை தாண்டிய புகைமூட்டத்தின் பாதிப்புகளை மலேசியா எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

அண்டை நாடான இந்தோனேசியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த உதவுவதற்காக மலேசியா முன்வந்தபோதிலும், இதுவரை அந்நாட்டிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.

இந்த உதவி தொடர்பான முன்மொழிவு, தாம் முன்னதாக மேற்கொண்ட ஜகார்த்தாவுக்கான அதிகாரப்பூர்வப் பயணத்தின்போது முன்வைக்கப்பட்டதாக சாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.

மேலும், இந்தோனேசியாவில் உள்ள தங்களது இணை அமைப்புகளுக்கு NADMA மற்றும் மலேசிய வெளியுறவு அமைச்சு ஆகியவை கடிதங்களையும் அனுப்பியுள்ளன. இருப்பினும், உதவி வழங்குவதற்கான மலேசியாவின் முன்மொழிவுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், புகைமூட்டப் பிரச்சனையை மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான மோதலாகக் கருதக்கூடாது.

மாறாக, இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு, காட்டுத்தீ ஏற்படுவதையும் அதனால் உருவாகும் எல்லை தாண்டிய புகைமூட்டத்தையும் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார் துணைப் பிரதமர்.

இந்த விவகாரம் தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், தேவை ஏற்பட்டால் அந்த விவகாரத்தைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (AGC) ஆராயும் என்று தெரிவித்தார்.

எனினும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதைவிட, நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதே சிறந்த அணுகுமுறையாக இருக்கும் என்பது தமது கருத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.