கோலா லங்காட், அக். 11 — சிலாங்கூர் புளூபிரிண்ட் (Blueprint Selangor) உபகரண உதவித் திட்டம் மற்றும் இந்தியத் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் ஐ-சீட் (i-SEED)கீழ், கோலா லங்காட் மாவட்டத்தில் 62 தொழில்முனைவோருக்கு இவ்வாண்டு RM4 லட்சத்துக்கும் அதிகமான வணிக உபகரண உதவிகள் வழங்கப்பட்டன.
இவர்களில் 44 பேர் புளூபிரிண்ட் திட்டத்தின் கீழ் உதவி பெற்றுள்ள நிலையில், ஐ-சீட் திட்டத்தின் கீழ் மேலும் 18 பேர் உதவி பெற்றனர்.
உதவிகள் பெறுவோரின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வணிக உபகரணங்கள் வழங்கப்பட்டதாக, சிலாங்கூர் மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புத் துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் தெரிவித்தார்.

தையல் இயந்திரங்கள், கொசு ஒழிப்புப் புகை தெளிப்புக் கருவிகள், அடுப்புகள், குளிரூட்டும் சாதனங்கள் மற்றும் இதர தொழில் உபகரணங்கள் உள்ளிட்டவை இத்திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
B40 பிரிவைச் சேர்ந்த சிறுதொழில் நடத்தும் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது இந்த உதவித் திட்டங்களின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் முழுவதும் இவ்வாண்டு புளூபிரிண்ட் திட்டத்திற்காக RM20 லட்சமும், ஐ-சீட் திட்டத்திற்காக RM10 லட்சமும் மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த உதவிகளைப் பெற்றவர்கள் அவற்றைச் சிறந்த முறையில் பயன்படுத்தித் தங்களது தொழில்களை விரிவுபடுத்துவதுடன், வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
உதவி பெறுவோரின் தேர்வு நடைமுறைகள் கிராமத் தலைவர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் (பெங்கூலு) மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக பாப்பாராய்டு கூறினார்.

இதன் மூலம் விண்ணப்பதாரர்களின் உண்மையான தேவைகளைக் கண்டறிந்து, தகுதியின் அடிப்படையில் உதவிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய முடிந்ததாக அவர் விளக்கினார்.
ஒவ்வொரு விண்ணப்பமும் சரிபார்ப்பு, விசாரணை மற்றும் தணிக்கை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியிருப்பதால் உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்து விநியோகிப்பதற்குச் சில காலம் எடுத்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சில உபகரணங்களை ஆர்டர் செய்ய வேண்டியிருப்பதுடன், சிலவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.







