ஷா ஆலாம், அக். 10 – கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள RM100 மில்லியன் நிதி, மாநில அரசாங்கத்தின் முயற்சிகளுக்குப் பெரும் ஆதரவாக அமையும் என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
அதேவேளையில், செப்பாங் பண்டார் செரினியாவில் புதிய பள்ளி வளாகம் அமைக்கும் திட்டமும் சிலாங்கூர் மக்களின் கல்வி வாய்ப்புகளையும் வசதிகளையும் மேம்படுத்த உதவும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்னெடுப்புகள் சிலாங்கூர் மக்களின் பாதுகாப்பு, வசதி மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான மாநில அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவும் என்று அவர் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், எல்மினா பகுதியில் தரவு மையங்கள் மற்றும் தளவாடக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக RM1.25 பில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதும், 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிலாங்கூரின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
இந்த வளர்ச்சித் திட்டங்களுடன் திறன் பயிற்சிகள், இலக்கவியல் தொழில்நுட்ப அறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் தேர்ச்சி ஆகியவை இணைக்கப்பட்டால், சிலாங்கூர் மக்களின் வருமானத்தையும் போட்டித்தன்மையையும் உயர்த்த முடியும் என அமிருடின் நம்பிக்கை தெரிவித்தார்.
கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், வரவு செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் தீவிரமாகப் பங்கேற்று மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் முன்வைக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் திறமையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் உரிய இலக்குகளை அடையும் வகையிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.







