ஷா ஆலாம், அக் 8: சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புகைமூட்டத்தைத் தொடர்ந்து, இம்மாநிலத்தில் உள்ள கல்வி அமைச்சின் கீன் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் நாளை முதல் முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 9 முதல் ( நாளை) நடைமுறைக்கு வரும் இந்த மூடல் உத்தரவு, சிலாங்கூர் மாநில கல்வித் துறையின் மறுஅறிவிப்பு வரும் வரை அமலாக்கத்தில் இருக்கும் என சிலாங்கூர் கல்வி இயக்குநர் டத்தின் வான் நோர் ஆஷிகின் அபு காசிம் தெரிவித்தார்.
"சிலாங்கூர் மாநில கல்வித் துறையின் கீழுள்ள அனைத்துப் பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு மூடப்படும்.
"மாணவர்களின் கற்றல் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காகப் பள்ளிகள் வீட்டிலிருந்தபடியே கற்றல் மற்றும் கற்பித்தல் (PdPR) முறையைச் செயல்படுத்த வேண்டும்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் காலத்தில் ஆசிரியர்களும் அமலாக்கக் குழுவினரும் நடப்பு உத்தரவுகள் மற்றும் தேவைகளுக்கு உட்பட்டு, வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து, பெற்றோர்களும் பாதுகாவலர்களும் சிலாங்கூர் மாநில கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை, குறிப்பாகப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி குறித்து தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி குறித்து பொதுமக்கள் எந்தவோர் ஊகங்களையும் செய்ய வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக சிலாங்கூர் மாநில கல்வித் துறை அல்லது கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மட்டுமே சான்றாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதே வேளையில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களும் இந்த மூடல் குறித்த தகவலை அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.




