புத்ராஜெயா, அக் 8 - மியான்மார் தனது நாட்டு மக்களை பெரிய அளவில் மீண்டும் அழைத்துச் செல்லல உதவத் தயாராக இருப்பதாகவும், அதற்கான செலவுகளைத் தாமே ஏற்கத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் மூலம் இதுவரை 10,493-க்கும் மேற்பட்ட மியான்மார் குடிமக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்; மேலும் பலரைத் திருப்பி அனுப்புவது குறித்து மலேசிய உள்துறை அமைச்சும் மியான்மார் தரப்பும் விவாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
மலேசியாவில் உள்ள தனது குடிமக்களை ஏற்றுக்கொள்ள மியான்மார் காட்டிய விருப்பத்தை மலேசியா பாராட்டுவதாக அன்வார் குறிப்பிட்டார்.
இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் தங்கள் சொந்தச் செலவில் மக்களைத் திரும்ப அழைத்தும் செல்லும் அளவுக்கு வேறு எந்த நாடுகளும் தயாராக இல்லை என்றார்.
“எனது அனுபவத்தில், மிகச் சில நாடுகள், அரிதாகவே சில நாடுகள் தங்கள் சொந்தச் செலவில் குடிமக்களை திரும்ப ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளன”
என்று மியான்மார் அதிபர் மின் ஆங் ஹ்லைங் (Min Aung Hlaing) குடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது அன்வார் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக மியன்மார் அதிபர் நேற்று தொடங்கி மலேசியாவிற்கு இரு நாள் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
பதிவு சரிபார்ப்புக்கு உட்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி எஞ்சிய மியான்மார் குடிமக்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அன்வார் கூறினார்.
தற்பொழுது தடுப்பு முகாம்களில் உள்ள 3,000 முதல் 4,000 வரையிலான மியான்மார் குடிமக்கள் திருப்பி பெற்றுக் கொள்ளப்படுவார்கள் என்று மின் ஆங் ஹ்லைங் குறிப்பிட்டதாகவும் அன்வார் கூறினார்.
மியன்மாரின் ஒத்துழைப்புக்கு, குறிப்பாக அதன் குடிமக்களைத் திருப்பி அனுப்புவதில் உதவியதற்கு அன்வார் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக அவ்விரு தலைவர்களும், மலேசியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் அனைத்து இனத்தைச் சேர்ந்த மியான்மார் குடிமக்களை தன்னார்வ, கண்ணியமான மற்றும் பாதுகாப்பான அடிப்படையில் திருப்பி அனுப்பும் முயற்சிகள் உட்பட பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.







