ஜெலபு, ஜூலை 30 : முதற்கட்டமாக 5,000 ரோஹிங்கியா மக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மியான்மார் ஒப்புக்கொண்டுள்ளது.
மலேசியாவில் பொது ஒழுங்கைப் பேணும் அதே வேளையில், நீண்டகாலமாக நீடித்து வரும் ரோஹிங்கியா மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஒரு முயற்சியாக அந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
"ஏன் அவர்களை நாம் அப்படியே திருப்பி அனுப்பக்கூடாது என்று மக்கள் கேட்கிறார்கள். எங்கே திருப்பி அனுப்புவது? மியான்மார் இதற்கு முன்பு அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது."இப்போது, மியான்மாருடனான நல்லுறவின் காரணமாக, மலேசியாவிலிருந்து 5,000 பேரைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்," என்றாரவர்.
சிம்பாங் டுரியானில் நடைபெற்ற ' பிரதமர் உடனான மாலை நேர தேநீர் விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றியபோது பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டார்.
மியான்மார், வங்காளதேசத்தில் இருந்தும் மூன்று லட்சம் ரோஹிங்கியாக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அன்வார், அந்த முன்னேற்றம் அரச தந்திரப் பேச்சுவார்த்தைகளின் மூலம் கிடைத்தப் பலன் என்றாரவர்.
இதனிடையே, பொது இடங்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனக் கூறிய அன்வார், மலேசியாவின் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.





