ஷா ஆலாம், அக் 8 : சபா, சரவாக்கில் பணியாற்ற நிரந்தரப் பணி வாய்ப்பு வழங்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளில் 63% விழுக்காட்டினர் மட்டுமே , அப்பணியில் சேர்ந்திருப்பதாக சுகாதார அமைச்சர் சுல்கிஃப்ளி அகமட் தெரிவித்தார்.
சரவாக் மாநிலத்தில் நிரந்தரப் பணியிடங்கள் வழங்கப்பட்ட 527 மருத்துவ அதிகாரிகளில் 337 பேரும், சபா மாநிலத்தில் பணியிடங்கள் வழங்கப்பட்ட 528 அதிகாரிகளில் 336 பேரும் மட்டுமே தங்களது பணிகளில் இணைந்துள்ளனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 58 விழுக்காடாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ள போதிலும், இதில் தமக்கு முழு திருப்தி இல்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
குடும்பங்களை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய கட்டாயம், கிராமப்புறங்களில் பணியாற்ற விருப்பம் இல்லாதது, நகர்ப்புற மருத்துவ வசதிகளையே தேர்ந்தெடுப்பது போன்ற காரணங்களால் பல மருத்துவ அதிகாரிகள் இந்த மாநிலங்களில் பணிபுரிவதை நிராகரிக்கின்றனர்.
மேலும், உடல்நலப் பிரச்சினைகள், போக்குவரத்து மற்றும் நிதிச் சிக்கல்கள், இடமாற்றத்திற்கான அதிகப்படியான செலவுகள் மற்றும் சபா அல்லது சரவாக்கில் பணியாற்றினால் சிறப்பு மருத்துவக் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் குறையும் என்ற தவறான எண்ணமும் இதற்குக் காரணங்களாக அமைகின்றன.
இளம் மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில் சுகாதார அமைச்சு தற்போது பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மருத்துவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக பணியிட முடிவுகள் இனி முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்பதோடு, இடமாற்றத்தின் போது ஏற்படும் உணவு, தங்குமிடம் மற்றும் கூடுதல் பயணச் செலவுகளை அமைச்சே முழுமையாக ஏற்கும்.
அத்துடன், மீண்டும் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பும்போது ஒரு மாத அடிப்படைச் சம்பளத்திற்கு நிகரான சிறப்பு இடமாற்றக் கொடுப்பனவு வழங்கப்படும்.
மேலும், சபா மற்றும் சரவாக்கில் பணியாற்றிய மருத்துவ அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் கல்வி விடுமுறைக்கு விண்ணப்பிக்கும்போது கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.






