ஷா ஆலம், 30 அக் : வெளிநாட்டிலிருந்து திரும்பிய 73 மலேசிய நாட்டு மருத்துவ நிபுணர்களில் மூன்று பேர் மட்டுமே 2021 முதல் 2025 வரை சுகாதார அமைச்சு வசதிகளில் பணியாற்ற தேர்வு செய்துள்ளனர்.
மீதமுள்ள 70 மருத்துவ நிபுணர்கள் தனியார் துறை மற்றும் சட்டபூர்வ நிறுவனங்களில் பணியாற்ற தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அகமது தெரிவித்தார்.
மேலும் மருத்துவப் பணியாளர்கள் வெளிநாட்டிற்கு இடம்பெயரும் பிரச்சனையை சமாளிக்க, அமைச்சு தற்போது ஊதியம் மற்றும் பணிநிலையை போட்டித்தன்மையுடன் மேம்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
பொது சுகாதார அமைப்பில் திறமையான மருத்துவ நிபுணர்கள், மருத்துவ அதிகாரிகள் (MO) மற்றும் செவிலியர்கள் தொடர்ந்து பணியாற்றும் வகையில் பல திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இது நிபுணர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என அவர் கூறினார்.
சிங்கப்பூர் சுகாதார அமைச்சு மலேசிய மருத்துவர் நிபுணர்களை மற்றும் செவிலியர்களை பணியில் சேர்க்கும் குற்றச்சாட்டை விளக்கும்போது, டாக்டர் சுல்கிஃப்ளி அதனை மறுத்தார். சிங்கப்பூர் சுகாதார அமைச்சுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், பணியில் சேர்க்கும் நடவடிக்கைகள் அரசு முயற்சி அல்ல அவை தனியார் முகவர்களின் நடவடிக்கை என உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.




