கேஎல்ஐஏ-வில் இடைத்தரகர்களாகச் செயல்படவில்லை; தாக்கப்பட்ட இரு போலீசார் மறுப்பு

7 அக்டோபர் 2026, 9:09 AM
கேஎல்ஐஏ-வில் இடைத்தரகர்களாகச் செயல்படவில்லை;  தாக்கப்பட்ட இரு  போலீசார் மறுப்பு

ஷா ஆலம், அக் 7: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1-இல் (KLIA1) கடமையில் இருந்தபோது, தாங்கள் இடைத்தரகர்களாக (ulat) அல்லது 'முகப்பிட முறைகேடு' (counter setting) நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என அரச மலேசிய போலீஸ் படையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்திருக்கின்றனர்.

மாறாக, கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி நடந்த சம்பவத்தின்போது, எல்லைக் கட்டுப்பாட்டு- பாதுகாப்பு அமைப்பின் (AKPS) தலைமை இயக்குனர் டத்தோ ஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் (Datuk Seri Mohd Shuhaily Mohd Zain) தங்களை உடல் ரீதியாகத் தாக்கியதாக அவ்விரு அதிகாரிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

வழக்கறிஞர் டத்தோ கமல் ஹிஷாம் ஜாஃபர் மூலம் அவர்களின் கூற்று அடங்கிய அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

தங்கள் மீதான இந்த அவதூறு குற்றச்சாட்டுகள், கடமையில் இருந்தபோது தங்களுக்கு நேர்ந்த உடல் ரீதியான தாக்குதல் என்ற முக்கியப் பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பப் பயன்படுத்தக் கூடாது என்று கமல் ஹிஷாம் கூறினார்.

"இத்தகைய குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும், முக்கியப் பிரச்சினையை மூடிமறைக்க இதைப் பயன்படுத்தக் கூடாது," என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தின்போது அவ்விரு போலீஸ் அதிகாரிகளும் அதிகாரப்பூர்வ கடமையில் இருந்ததாகவும், பொது இடத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அவர்கள் காயமடைந்தது மட்டுமின்றி, சட்ட அமலாக்க அதிகாரிகள் என்ற முறையில் அவர்களின் கண்ணியமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

AKPS அமைப்பு போலீஸ் துறையின் ஒரு பகுதி அல்ல என்றும், இரு அமைப்புகளுக்கும் வெவ்வேறு செயல்பாடுகள் மற்றும் அதிகார வரம்புகள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டப்பூர்வமாகப் பார்க்கும்போது, அரசாங்க ஊழியரைத் தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல் (குற்றவியல் சட்டம் செக்க்ஷன் 186) மற்றும் வேண்டுமென்றே காயப்படுத்துதல் (குற்றவியல் சட்டம் செக்க்ஷன் 323) போன்ற சட்டப் பிரிவுகளின் கீழ் இந்தச் சம்பவம் அமையக்கூடும் என்று கமல் ஹிஷாம் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார், ஏகேபிஎஸ் ஊழியர்கள், மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின்(MAHB) துணை போலீசார், பயணிகள் பைகளைக் கையாள்பவர்கள்,மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 25 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, டத்தோ ஸ்ரீ முகமட் ஷுஹைலி இருவரைக் கடுமையாகக் கோபிப்பதும், அதில் ஒருவரின் காதை இழுப்பதும் போன்ற காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பேசுப் பொருளாகியிருந்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.