ஷா ஆலாம், அக் 20 : கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இரு போலீஸ் அதிகாரிகளைத் தாக்கியது தொடர்பில், மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்பு அமைப்பின் (AKPS) தலைமை இயக்குநர் ஷுஹைலி சய்ன் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டத் துறை தலைவர் டுசுகி மொக்தார் அத்தகவலை உறுதிப்படுத்தினார்.
தானாகவே காயம் விளைவித்ததற்காக,குற்றவியல் சட்டத்தின் 323 பிரிவின் கீழ் ஷுஹைலி மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமென அவர் கூறினார்.
அச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஓராண்டு சிறைத்தண்டனை, 2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க முடியும்.
"அவர் சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார்," என்று டுசுகி மொக்தார் தெரிவித்தார்.
KLIA முனையம் 1-ல் ஷுஹைலி ஒரு நபரைக் கடுமையாக கையாள்வதைக் காட்டும் சிசிடிவி (CCTV) காட்சிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து இந்த சம்பவம் பொதுமக்களின் கவனத்திற்கு வந்தது.
இவ்வேளையில், தன் மீதான இந்த விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், அதிகாரிகள் எடுக்கும் எந்தவொரு முடிவையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஷுஹைலி கூறியுள்ளார்.






