ஷா ஆலாம், அக். 6 — சிலாங்கூரில் உள்ள கிராமப்புறங்களின் மேம்பாட்டை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இணையாக முன்னெடுக்க அடுத்த ஆண்டு கூடுதல் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கிராமப்புறங்களின் உள்கட்டமைப்புத் தேவைகளை முறையாக அடையாளம் கண்டு, அவற்றை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதனை சிலாங்கூர் மாநில கிராமப்புற மேம்பாட்டுத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

அதேவேளை, கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கூடுதல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
சமூக மண்டபங்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதுடன், கிராமங்களை அழகுபடுத்துதல் மற்றும் பசுமைச் சூழலை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

எனினும், கிராமங்களை நவீனமயமாக்கும் முயற்சியில் அவற்றின் பாரம்பரிய அம்சங்கள் அகற்றப்படக்கூடாது என்றும் ரிசாம் வலியுறுத்தினார்.
சிலாங்கூர் வேகமாக வளர்ச்சியடைந்து வந்தாலும், பாரம்பரிய கிராமங்களின் தனித்துவமான அடையாளமும் கலாச்சாரமும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
மாநிலத்தில் உள்ள மொத்தம் 373 பாரம்பரிய கிராமங்களும், அந்தந்த பகுதிகளின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தபடியே மேலும் விரைவான மேம்பாட்டுக்கு உட்படுத்தப்படும் என்று ரிசாம் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் கிராமப்புற மக்களின் அன்றாட வசதி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதுடன், அவர்களின் உள்ளூர் வருமானத்தையும் அதிகரிக்க உதவும் என்று அவர் கூறினார்.







