ஷா ஆலாம், செப். 23 — மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த சிலாங்கூர் கலாச்சாரத் திருவிழா 2026 உறுதுணையாக இருக்கும்.
இந்த நிகழ்வு உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் சமூகத்தினருக்கும் பொருளாதார ரீதியாகப் பயனளித்து வருவதாகவும் மாநில கலாச்சார விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.
மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இத்திருவிழா, கலைத் துறையினர் தங்களது திறமைகளையும் படைப்புகளையும் பொதுமக்கள் மத்தியில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குவதாக அவர் கூறினார்.

குடும்பத்தினருடன் அனைவரும் கலந்துகொண்டு ரசிக்கும் வகையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் இத்திருவிழாவில் இடம்பெற்றுள்ளதாக போர்ஹான் தெரிவித்தார்.
அவற்றில் ‘கேமா செம்புலிங்’ எனப்படும் பாரம்பரிய இசை நிகழ்ச்சி, பல்வேறு கலாச்சாரக் கலைநிகழ்ச்சிகள், தற்காப்புக் காட்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் சிறார்களுக்கான போட்டிகள் உள்ளிட்டவை அடங்கும்.

அடையாளமும் பாரம்பரியமும் இல்லாமல் வளர்ச்சியும் முன்னேற்றமும் முழுமையானதாக இருக்காது. கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு, அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என போர்ஹான் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
கோலா லங்காட், டத்தாரான் பந்தாய் பத்து லாவுட்டில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் கலாச்சாரத் திருவிழாவை போர்ஹான் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு, தேசிய கலாச்சார மற்றும் கலைத் துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.







