ஷா ஆலாம், அக். 5 — நாட்டில் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் ரொக்கப் பணத்தை ஏற்காமல் இருப்பதை தடுக்க தெளிவான விதிமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும் என மலேசிய நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு (FOMCA) வலியுறுத்தியுள்ளது.
QR உள்ளிட்ட பணப் பரிவர்த்தனைகளின் வளர்ச்சி, பரிவர்த்தனைகளை எளிதாக்கி அவற்றை விரைவுபடுத்துவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஆதரவளிப்பதாக அந்த அமைப்பு கூறியது.
ஆனால், தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்து வருவது வரவேற்கத்தக்கது என்றாலும், அதன் காரணமாக மக்கள் ரொக்கப் பணத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பை இழக்கக் கூடாது.

குறிப்பாக, பேங்க் நெகாரா மலேசியாவால் வெளியிடப்படும் ரிங்கிட் நோட்டுகளும் நாணயங்களும் மலேசியாவில் தொடர்ந்து சட்டபூர்வமான பணமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரொக்கப் பணம் செலுத்தும் வாய்ப்பை முற்றிலும் அகற்றுவது குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
தொழில்நுட்பக் கோளாறு அல்லது இணையதள அணுகல் பாதிப்பு காரணமாக இலக்கமுறை பணப் பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், ரொக்கப் பணம் பயன்படுத்துவதற்கான மாற்று வாய்ப்பை கொண்டிருக்க வேண்டும்.
இதனிடையே, உணவங்காடிகள் மற்றும் பொது போக்குவரத்து பயணச்சீட்டு கவுன்ட்டர்கள் உள்ளிட்ட சில இடங்களில் ரொக்கப் பணம் செலுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பாக புகார்கள் கிடைத்துள்ளதாகவும் FOMCA கூறியது.
நகர்ப்புறங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களிடமிருந்தே இதுபோன்ற புகார்கள் அதிகளவில் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.
எனவே, நாட்டின் இலக்கமயமாக்கல் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டாலும், அனைத்து தரப்புக்கும் ஏற்ற வகையில் ரொக்கப் பணம் செலுத்தும் வாய்ப்பும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே FOMCA-வின் நிலைப்பாடாக உள்ளது.




