கோலாலம்பூர், அக். 10 – அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினால் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் குடும்பங்களின் சுமையைக் குறைக்க அரசாங்கத்தின் பண உதவிகளும் மானியங்களும் தொடர்ந்து வழங்கப்படுவது அவசியம் என மலேசியப் பயனீட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FOMCA) வலியுறுத்தியுள்ளது.
பி40, எம்40 பிரிவினர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைப் பராமரிக்கும் குடும்பங்களுக்கு இத்தகைய உதவிகள் மிகவும் அவசியமானவை என FOMCA தலைமைச் செயலதிகாரி டாக்டர் டி. சரவணன் தெரிவித்தார்.

ரஹ்மா ரொக்க உதவி (STR), ரஹ்மா அடிப்படை உதவி (SARA), ஜுவாலான் ரஹ்மா மற்றும் அக்ரோ மடானி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதை FOMCA வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
குறைந்தபட்ச மாத ஊதியத்தை RM1,700 இலிருந்து RM2,000 ஆக உயர்த்தும் நடவடிக்கை, தனிநபர் வருமான வரிச் சலுகைகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாடுகளும் தொழிலாளர்களின் செலவிடக்கூடிய வருமானத்தையும் வாங்கும் சக்தியையும் அதிகரிக்கக்கூடும்.
இதற்கிடையே, மலிவுக் கட்டணத்தில் பயணிக்க உதவும் மை50 (My50) பயண அட்டைத் திட்டத்தைத் தொடர்வது, ரயில் சேவைகளை அதிகரிப்பது, ரயில் உள்கட்டமைப்புகளைச் சீரமைப்பது மற்றும் பேருந்துச் சேவைகளை மேம்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளும் மக்களின் போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்க உதவும்.

மேலும், உள்நாட்டு உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் உணவு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை ஃபோம்கா வரவேற்கிறது.
அதேவேளையில், மாற்றுத்திறனாளிகள், படுக்கையிலேயே பராமரிக்கப்பட வேண்டிய நோயாளிகளைப் பராமரிப்போர் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கான உதவிகளை அதிகரிப்பதும் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நேர்மறையான நடவடிக்கை என ஃபோம்கா குறிப்பிட்டது.





