QR பரிவர்த்தனைகளுக்கு நவம்பர் 1 முதல் சேவைக் கட்டணமா? நிதியமைச்சு மறுப்பு

18 அக்டோபர் 2026, 7:02 AM
QR பரிவர்த்தனைகளுக்கு நவம்பர் 1 முதல் சேவைக் கட்டணமா? நிதியமைச்சு மறுப்பு

புத்ராஜெயா, அக். 18 – எதிர்வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் QR பரிவர்த்தனைகளுக்குச் சேவைக் கட்டணம் விதிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலை நிதியமைச்சு மறுத்துள்ளது.

இந்தக் கட்டண அறிவிப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் சுவரொட்டி போலியானது என்றும், QR சேவைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படுவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் நிதியமைச்சு தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெளிவுபடுத்தியது.

இவ்வாண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் QR பரிவர்த்தனை சேவைகளுக்குக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடும் அந்தச் சுவரொட்டியைப் பொதுமக்கள் நம்பவோ, மற்றவர்களுடன் பகிரவோ வேண்டாம் என அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நிதியமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தவறான தகவல்கள் சமூகத்தில் குழப்பத்தையும் தேவையற்ற அச்சத்தையும் ஏற்படுத்துவதைத் தவிர்க்க, அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு தளங்களில் மட்டுமே தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, QR குறியீடு சேவைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படுவதாகக் குறிப்பிடும் அந்தச் சுவரொட்டி ஃபேஸ்புக் மற்றும் த்ரெட்ஸ் (Threads) ஆகிய சமூக ஊடகத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இதையடுத்து, சமூக ஊடகப் பயனர்களிடையே பல்வேறு கருத்துகளும் எதிர்வினைகளும் எழுந்தன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.