ஷா ஆலம், அக் 3: அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் பள்ளிகளுக்கான மறுசுழற்சி போட்டியின் போது, அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள் 1,258 கிலோகிராம் மறுசுழற்சி பொருட்களை விற்று 529 ரிங்கிட் வருவாயை ஈட்டின.
பண்டான் இண்டா இடைநிலைப் பள்ளி மிக அதிகமாக 992.45 கிலோ பொருட்களைச் சேகரித்து 439 ரிங்கிட் வருவாயைப் பெற்றது.
அதே வேளையில், தாமான் கெராமட் 2 இடைநிலைப்பள்ளி 265.95 கிலோ பொருட்களைச் சேகரித்து 90 ரிங்கிட் வருவாய் ஈட்டியது.

காகிதம், அட்டைப்பெட்டிகள், நெகிழி (பிளாஸ்டிக்), இரும்புத் தகரங்கள், இரும்பு, மின்னணு கழிவுகள் (e-waste), அலுமினியம் மற்றும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் ஆகியவை சேகரிக்கப்பட்ட பொருட்களில் அடங்குமென அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
இந்தப் போட்டி, பள்ளிகளில் மறுசுழற்சி பழக்கத்தை ஊக்குவிப்பதையும், கழிவுகளை முறையாக நிர்வகிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மறுசுழற்சி பழக்கம் மற்றும் சரியான கழிவு நிர்வகிப்பு நடைமுறைகள் தொடர்பான கல்வியை வழங்குவதோடு, குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவைக் குறைப்பதற்கான முயற்சியாகவும் இந்த நடவடிக்கை அமைந்ததாக அக்கழகம் குறிப்பிட்டது.








