ஷா ஆலாம், அக் 1: பணியிடத்தில் ஆதரவு அமைப்பை உருவாக்குவதற்கும், மாற்றுத்திறனாளிகள் தங்களைத் தனிமைப்படுத்த-ப்பட்டவர்களாக உணர்வதைத் தடுப்பதற்கும், ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தது இரண்டு மாற்றுத்திறனாளி ஊழியர்களைப் பணியமர்த்துவதை சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் நடவடிக்கை மன்றம் (MTOS) இலக்காகக் கொண்டுள்ளது.
மாற்றுத்திறனாளி ஊழியர்கள் தங்களது பணிகளைச் செய்யும்போது எதிர்கொள்ளும் சவால்களின் போது ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக்கூடிய நண்பர்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய இந்த அணுகுமுறை முக்கியமானது என அதன் தலைவர் டானியல் அல்-ரஷித் தெரிவித்தார்.
"ஒரு முதலாளி குறைந்தது இரண்டு பேராவது வேலைக்கு எடுத்தால், அவர்களுக்குள் 'நண்பர்கள்' கிடைப்பார்கள், ஒன்றாக விவாதிக்கவும் பரஸ்பரம் உதவிக் கொள்ளவும் முடியும், இதனால் அவர்கள் தனிமையாக உணர மாட்டார்கள் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம் .
"முதலாளி ஒரு மாற்றுத்திறனாளி ஊழியரை மட்டும் வேலைக்கு எடுத்தால், அவர்கள் நிறுவனத்தில் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரலாம். இந்தச் சூழ்நிலை அவர்கள் வேலையை விட்டு விலகத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களில் ஒன்றாக மாறக்கூடும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

மீடியா சிலாங்கூர் தயாரிப்பிலான ‘ஸ்கோப் சிலாங்கூர் பட்ஜெட் 2027’ (SKOP Belanjawan Selangor 2027) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, பத்து தீகா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டானியல் அல்-ரஷித் ஹாரூன் அவ்வாறு கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி, சிலாங்கூர் அரசு சார்ந்த நிறுவனங்களில் (GLC) எட்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, குறிப்பாக தொழில்முறைத் துறைகளில் (professional field) வேலை வாய்ப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததாக டானியல் கூறினார் .
சுமார் 20 மாற்றுத்திறனாளி திறமையாளர்களைக் கொண்ட ஆரம்பக் குழுவிலிருந்து 15 பேர் தற்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பொருத்தமான பதவிகளில் அமர்த்தப்படுவதற்கு முன்பு பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர் .
மாற்றுத்திறனாளி ஊழியர்கள் ஒரு வேலையில் நீண்ட காலம் நிலைத்து நிற்காமல் போவதற்குக் காரணம் பெரும்பாலும் முதலாளிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து ஆதரவு அமைப்பு இல்லாததே ஆகுமென டானியல் மேலும் விவரித்தார்.
எனவே, மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியிடச் சூழலுக்குத் தங்களை மாற்றியமைத்துக் கொள்வதையும், வேலையில் தொடர்ந்து நீடிப்பதையும் மதிப்பிடுவதற்காக, அவர்கள் பணியமர்த்தப்பட்ட பிறகு அவர்களின் முன்னேற்றத்தை MTOS கண்காணிக்கும் .
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சி, அவர்கள் வேலைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு மட்டும் நின்றுவிடாமல் தொடர்வதை உறுதி செய்ய இந்த கண்காணிப்பு முக்கியம் என்று அவர் விளக்கினார் .








