சிலாங்கூரில் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு விகிதத்தை 1% உயர்த்த இலக்கு

23 அக்டோபர் 2026, 4:40 AM
சிலாங்கூரில் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு விகிதத்தை 1% உயர்த்த இலக்கு

கிள்ளான், அக். 23 – சிலாங்கூர் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு விகிதத்தை தற்போதைய 0.4 விழுக்காட்டிலிருந்து 1 விழுக்காடாக உயர்த்த மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, மாநில அரசின் துணை நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். தொடர்ந்து, தனியார் துறையிலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சிலாங்கூர் சிறப்புத் தேவையுடையோர் அறக்கட்டளையான யானிஸ் (YANIS), ஏற்கெனவே 1 விழுக்காட்டு வேலைவாய்ப்பு இலக்கை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில சமூக நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி, கிள்ளானில் உள்ள வின்ட்ஹாம் அக்மார் தங்கும் விடுதியில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் விருது விழாவுக்குப் பின்னர் இதனைத் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் சமூக நல உதவிகளை மட்டுமே சார்ந்திருக்காமல், தங்களது திறன்களை மேம்படுத்தி, சுயமாக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் மாநில அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.

இதற்காகத் தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதுடன், சிறப்பு வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் வாயிலாக வேலை தேடும் மாற்றுத்திறனாளிகளையும் முதலாளிகளையும் இணைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை முதலாளிகள் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ற பணிச்சூழல், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில், ‘Disability Equality Training’ (DET) எனப்படும் பயிற்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

சமூக நலத்துறை (JKM) மற்றும் MBI ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இப்பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

சிலாங்கூரில் சுமார் 1,59,000 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ள நிலையில், பொதுக் கட்டடங்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுப் பயன்பாட்டு வசதிகளை அவர்கள் சமமாக அணுகுவதையும் உறுதிசெய்ய மாநில அரசு விரும்புகிறது.

இதற்காக, கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களைத் திட்டமிடும் போதே மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவித்ததுடன், அனைவரையும் உள்ளடக்கிய பணிச்சூழலை உருவாக்கப் பங்களித்த முதலாளிகள், பணியாளர்கள், ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களை அங்கீகரிக்கும் வகையில் 2026-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் விருது விழா நடைபெற்றது.

இவ்விழாவில் நான்கு பிரிவுகளின் கீழ் மொத்தம் 12 விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விருது விழாவை ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்ச்சியாக மாற்றவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.