முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப பொது இடங்களை அமைத்தல் அவசியம்

15 செப்டெம்பர் 2026, 4:13 AM
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப பொது இடங்களை அமைத்தல் அவசியம்

ஷா ஆலாம், செப்.15: பொதுமக்கள் வசதிகளை மேம்படுத்தும் ஒவ்வொரு திட்டத்திலும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஊராட்சி அமைப்புகளுக்கு (PBT) சிறப்பு வழிகாட்டுதல்களை சிலாங்கூர் மாநில அரசு உருவாக்க வேண்டும்.

இதனை புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்நடவடிக்கை, திட்டங்கள் வெறும் கொள்கை ஆவணமாக இல்லாமல், மக்களிடம் நேரடியாகச் சென்றடையும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் என அவர் கூறினார்.

மூத்த குடிமக்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி உபகரணங்கள், அவசரகால உதவிக்கான ‘Panic Button’ உள்ளிட்ட வசதிகளை பொது இடங்களில் ஏற்படுத்துவதுடன், அனைத்து தரப்பினரும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய பொதுவசதிகள் மேலும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட வேண்டும் என புவா பெய் லிங் தெரிவித்தார்.

மீடியா சிலாங்கூரின் SKOP பட்ஜெட் சிலாங்கூர் 2027 நிகழ்ச்சிக்காக அண்மையில் வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதனிடையே, பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ), மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற நகரத்தை உருவாக்கும் நோக்கில், பெட்டாலிங் ஜெயா பராமரிப்பு பொருளாதார செயல்திட்டம் 2025–2030-ஐ அறிமுகப்படுத்திய முதல் ஊராட்சி மன்றமாக திகழ்கிறது.

பெட்டாலிங் ஜெயாவில் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில், அவர்களில் சுமார் 12 விழுக்காட்டினர் மூத்த குடிமக்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இந்தச் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியால் அறிவிக்கப்பட்ட இந்தக் கொள்கை, முதுமையடைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமாக மாறும் சூழலை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது.

மாநில மக்கள் தொகையில் 8.1 விழுக்காட்டினர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பு தேவைப்படும் பிற தரப்பினரின் தேவைகளை உள்ளடக்கிய வகையில், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பராமரிப்பு சூழலை உருவாக்குவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.