தாமான் ஸ்ரீ மூடா தீர்ப்பு : ஷா ஆலாம் வெள்ளத் தடுப்புப் பணிகளை சிலாங்கூர் அரசு மேம்படுத்தும்

2 அக்டோபர் 2026, 2:22 AM
தாமான் ஸ்ரீ மூடா தீர்ப்பு :  ஷா ஆலாம் வெள்ளத் தடுப்புப் பணிகளை சிலாங்கூர் அரசு  மேம்படுத்தும்
தாமான் ஸ்ரீ மூடா தீர்ப்பு :  ஷா ஆலாம் வெள்ளத் தடுப்புப் பணிகளை சிலாங்கூர் அரசு  மேம்படுத்தும்
தாமான் ஸ்ரீ மூடா தீர்ப்பு :  ஷா ஆலாம் வெள்ளத் தடுப்புப் பணிகளை சிலாங்கூர் அரசு  மேம்படுத்தும்

ஷா ஆலாம், செப் 2 - 2021-ஆம் ஆண்டு தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்குக்கு அரசாங்கமே பொறுப்பு என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, ஷா ஆலாமில் வெள்ளத் தடுப்புப் பணிகளை சிலாங்கூர் அரசு மேம்படுத்தும் என்று ஊராட்சி சுற்றுலாத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங்கு சூ லிம் (Dato’ Ng Suee Lim) தெரிவித்தார்.

தாமான் ஸ்ரீ மூடா தேக்ககம், வடிகால் அமைப்பு, அருகிலுள்ள நதிக்கரைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல், ஷா ஆலம் நகர்ப்புற மழைநீர் வடிகால் நடவடிக்கை திட்டம் (SASUD), செக்க்ஷன் 25 கிள்ளான் நதி வெள்ளத் தடுப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசும், ஷா ஆலம் மாநகராட்சி மன்றமும் (MBSA) தொழில்நுட்ப அமைப்புகளும் இணைந்து செயல்படுத்தும் என்று அவர் கூறினார்.

“ தாமான் ஸ்ரீ மூடாவைச் சுற்றியுள்ள கிள்ளான் ஆற்றை ஆழப்படுத்தும் நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்துள்ளது. இதனால் ஆற்றின் கொள்ளளவு சுமார் 20 சதவீதம் அதிகரிக்கும்.

மேலும் இப்பகுதியில் பம்புகள் மற்றும் மதகுகளின் நிர்வகிப்பும் மேம்படுத்தப்படும்,” என்று அவர் நேற்று 'மீடியா சிலாங்கூர்' (Media Selangor) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

கிள்ளான் ஆற்றை ஆழப்படுத்த மாநில அரசு 30 மில்லியன் முதல் 40 மில்லியன் ரிங்கிட் வரை செலவிட்டுள்ளதாக ங்கு தெரிவித்தார்.

மேலும், கூட்டரசு அரசால் நிதியளிக்கப்பட்ட 140.72 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான செக்க்ஷன் 25 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அத்திட்டம் 2029 ஜனவரி 31 -ஆம் தேதி நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.

"இந்த வெள்ளத் தடுப்பு முயற்சிகள் இப்போதுதான் தொடங்கப்படவில்லை. சில திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு, தொடர்ந்து நடந்து வருகின்றன" என்றார் அவர்.

கடந்த திங்கட்கிழமை (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றம் அதன் தீர்ப்பில், 2021 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 50 தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்பாளர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.

மேலும், கூட்டரசு அரசு, சிலாங்கூர் நீர்ப்பாசன, வடிகால் துறை (JPS), மற்றும் ஷா ஆலாம் மாநகர் மன்றம் ஆகியவை அப்பேரிடருக்குப் பொறுப்பு என்றும் கண்டறிந்தது.

இந்தத் தீர்ப்பை மாநில அரசு மதிக்கிறது என்றும், தீர்ப்பின் விவரங்களை ஆராய்ந்து, சிலாங்கூர் சட்ட ஆலோசகர் மொகமட் ஒன் அப்துல் அஜிசிடம் எதிர்கால நகர்வுகள் குறித்து கலந்தாலோசிக்கப் போவதாகவும் ங்கு கூறினார்.

மேலும், வடிகால் அமைப்புகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளின் நிர்வகிப்பை ஊராட்சி அமைப்புகள் தொடர்ந்து பயனுள்ள வகையில் கையாள வேண்டும் என அத்தீர்ப்பு உணர்த்துவதாகவும் அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.