கோம்பாக், அக். 1: நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பெக்கான் லாமா ராவாங் நகரை பாரம்பரியப் பகுதியாக மேம்படுத்துவதன் மூலம், அதன் வரலாற்று முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதுடன் சுற்றுலாத் தலமாகவும் வளர்க்க முடியும்.
இதனை ராவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் தெரிவித்துள்ளார்.
இந்த நகரின் வரலாற்று அடையாளத்தைப் பாதுகாப்பதுடன், அப்பகுதியின் தற்போதைய பயன்பாட்டையும் மேம்படுத்தி மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பகுதியாக மாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

கோலாலம்பூரில் இருந்து ஈப்போவுக்குச் செல்லும் முக்கியப் பாதையில் அமைந்திருந்த பெக்கான் லாமா ராவாங், ஒரு காலத்தில் பயணிகளின் முக்கிய ஓய்விடமாகவும், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சமூக வசதிகள் குவிந்திருந்த நகரமாகவும் விளங்கியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மூன்று சீனக் கோயில்கள் அப்பகுதியில் இருப்பதாகவும், தகரச் சுரங்கத் தொழிலின் வரலாற்றுடனும், ஆரம்பகால மின்சார வசதிகளின் வளர்ச்சியுடனும் அப்பகுதி தொடர்புடையதாகவும் சுவா குறிப்பிட்டார்.
இந்த வரலாற்று அம்சங்களை பாரம்பரிய உணவு வகைகள், பழைய கட்டடங்கள், பின்புறச் சந்துகள் மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுடன் இணைத்து திட்டமிட்ட சுற்றுலா தயாரிப்புகளாக உருவாக்க முடியும்.

சுவரோவியங்கள், கலைச் சந்துகள், கைவினை நடவடிக்கைகள், பழைய பொருட்கள் விற்பனைச் சந்தைகள் மற்றும் நடைபாதைகள் போன்ற அம்சங்களை உருவாக்குவதன் மூலம் அப்பகுதியை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்.
இதனிடையே, இந்த நகரை பாரம்பரியப் பகுதியாக மேம்படுத்தும் முன்மொழிவுக்கு செலாயாங் நகராண்மைக் கழகம் (MPS) ஆதரவு தெரிவித்துள்ளது.
அப்பகுதியின் வரலாற்று மதிப்பு மற்றும் தனித்துவத்தை கருத்தில் கொண்டு இந்த முன்மொழிவுக்கு ஆதரவளிப்பதாக MPS தலைவர் ஷாமான் ஜலாலுடின் கூறினார்.







