கோலாலம்பூர்,செப் 29 : கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட ‘ஓப்ஸ் டாடு காஸ்’ (Ops Dadu Khas) அதிரடி சோதனையில் 74 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, இணையவழி சூதாட்டம் மற்றும் மோசடி கும்பலின் நடவடிக்கையைப் போலீசார் முறியடித்தனர்.
வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையுடன் (JSJK) இணைந்து எட்டு குடியிருப்பு வளாகங்களில் இந்த ஒரே நேரத்திலான அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
அந்த கைது நடவடிக்கையில் 20 முதல் 50 வயதுக்குட்பட்ட 67 ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் அடங்குவர். அவர்களில் 61 பேர் சீனா, 12 பேர் வியட்நாம் மற்றும் ஒருவர் தைவான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அவர் கூறினார்.
"பரிசோதனையில், இந்த எட்டு வளாகங்களும் இணையவழி சூதாட்டம், காதல் அழைப்பு மோசடிமற்றும் இல்லாத முதலீட்டு மோசடிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என நம்பப்படுகிறது.
மேலும், அவை மோசடி அழைப்பு மையத்தில் வேலை செய்தவர்களின் தங்குமிடங்களாகவும் பயன்படுத்தப்பட்டன," என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அந்தச் சோதனையின் போது, கணினிகள், மடிக்கணினிகள், மோடம்கள் மற்றும் பல்வேறு வர்த்தக முத்திரையிலான கைபேசிகள் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பல மின்னணு சாதனங்களையும் சோதனைப் படையினர் பறிமுதல் செய்ததாக எம். குமார் கூறினார்.
அதுமட்டுமின்றி, 0.8 கிராம் எடையுள்ள 'யாபா' (Yaba) ரக போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஐந்து சிவப்பு நிற மாத்திரைகள் அடங்கிய ஒரு வெளிப்படையான பிளாஸ்டிக் பாக்கெட்டையும், 5.72 கிராம் எடையுள்ள 'ஷாபு' (Syabu) ரக போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் படிக தூள் மற்றும் கட்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
"சூதாட்ட நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் சமூக சீரழிவுக்கு கணிசமான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால், அதனை ஒழிப்பதில் அரச மலேசிய போலீஸ் படை (PDRM) எப்போதும் உறுதியாக உள்ளது.
உரிமம் இல்லாத அனைத்து வகையான சூதாட்ட நடவடிக்கைகளுக்கும் எதிரான விரிவான அமலாக்க நடவடிக்கைகள், உள்ளூர் அதிகார அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பங்களிப்போடு தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்," என்று டத்தோ குமார் கூறினார்.
இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழிப்பதற்கு பொதுமக்கள் தொடர்ந்து தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.







