ஜோகூர் பாரு, செப். 28 – தாமான் செந்தோசாவில் கஞ்சி விற்பனை செய்யும் கடை ஒன்றின் மேசைகள் மற்றும் நாற்காலிகள் மீது காரை மோதியதுடன், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த ஒருவரை இரும்புக் குழாயால் தாக்க முயன்றதாக நம்பப்படும் வெளிநாட்டவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், சந்தேக நபர் ஆபத்தான முறையில் காரை ஓட்டியதுடன் கடையின் மேசை மற்றும் நாற்காலிகள் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது. பின்னர், சந்தேக நபர் அங்கிருந்து தப்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக 41 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவர் அதிகாலை 2.27 மணியளவில் போலீசில் புகார் செய்ததாக ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் அஸ்ருல் ஹிஷாம் முகமது ஷஃபேய் தெரிவித்தார்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 279ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்தப் பிரிவின் கீழ் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது 2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அத்துடன், குற்றவியல் சட்டத்தின் 324/511ஆவது பிரிவுகளின் கீழும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது அவற்றில் ஏதேனும் இரண்டு தண்டனைகள் விதிக்கப்படலாம்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் (IPD) ஹாட்லைன் 07-218 2323 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.







