கோலாலம்பூர், செப்.26 – ஷாங்காய் மற்றும் ஹாங்சோவுக்கான அண்மைய பணிப் பயணம் குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கியுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மலேசியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இந்தப் பயணத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தற்போது வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்த நிலையில் உள்ள மலேசியா–சீனா இருதரப்பு உறவுகளை இரு நாடுகளும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் புதிய வாய்ப்புகளை தொடர்ந்து ஆராய்வதுடன், அதிக வாய்ப்புகளைக் கொண்ட புதிய ஒத்துழைப்புகளையும் உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
உலகத் திறன் போட்டி மற்றும் உச்சி மாநாட்டில் மலேசியா பங்கேற்றதுடன், ஹாங்சோவில் நடைபெற்ற உலகளாவிய டிஜிட்டல் வர்த்தகக் கண்காட்சியிலும் (GDTE) கலந்து கொண்டது, சர்வதேச அரங்கில் நாட்டின் திறன்களையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்துவதற்கான முக்கிய வாய்ப்பாக அமைந்ததாக அன்வார் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுக்கும் முயற்சிகளில் மனிதநேயம் மபுறக்கணிக்கப்படக் கூடாது என்ற மலேசியாவின் நிலைப்பாட்டையும் தாம் தெளிவாக எடுத்துரைத்ததாக பிரதமர் தெரிவித்தார்.
மக்களின் நலனையும் நாட்டின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, மடாணி இராஜதந்திரப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.







