வணிக விண்ணப்ப முறைகளை முழுமையாக இணையமயமாக்க அரசு பரிசீலனை – ஹன்னா யோ

26 செப்டெம்பர் 2026, 1:38 AM
வணிக விண்ணப்ப முறைகளை முழுமையாக இணையமயமாக்க அரசு பரிசீலனை – ஹன்னா யோ

பெட்டாலிங் ஜெயா, செப்.26 – வணிக விண்ணப்பங்களுக்கான தற்போதைய நடைமுறைகளை அரசாங்கம் மறுஆய்வு செய்து வருகிறது.

அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, தகவல்களைப் பெறுவதற்காக தொழில்முனைவோர் அதிக நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வணிகத் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் நடவடிக்கைகளை முழுமையாக இணையவழியாக மேற்கொள்வதற்கான மாற்றத்தைச் செயல்படுத்துவதே இதன் நோக்கம் என கூட்டரசு பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.

தேவையற்ற நடைமுறைகள் அகற்றப்படுவதன் மூலம் வணிகத் துறையினர் எதிர்கொள்ளும் நிர்வாகச் சுமையைக் குறைக்க முடியும்.

அதே வேளை நேரத்தையும் செலவையும் மிகவும் திறமையான முறையில் பயன்படுத்த முடியும். ஊழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் கணிசமாகக் குறைக்கப்படும் என அவர் கூறினார்.

வணிகத் துறையினர் தங்களது செயல்பாடுகளை மாற்றியமைத்து முன்னேற்றம் காண வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசாங்கமும் தனது சேவை வழங்கும் முறைகளை மேம்படுத்துவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

வணிக உரிமையாளர்களுக்கு நிர்வாக ரீதியில் நடைமுறைக்கு ஏற்ற பல மாற்றங்கள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹன்னா யோ தெரிவித்தார்.

அவற்றில் ஒன்றாக, தகுதி பெற்ற வணிக நிறுவனங்களுக்கு கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான டிபிகேஎல் வழங்கும் வணிக உரிமங்களை மூன்று ஆண்டுகள் வரை புதுப்பித்துக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கான உரிமப் புதுப்பிப்பைத் தேர்வு செய்யும் வணிக நிறுவனங்களுக்கு ஐந்து விழுக்காடு கழிவும், மூன்று ஆண்டுகளுக்கான புதுப்பிப்பை மேற்கொள்பவர்களுக்கு 10 விழுக்காடு கழிவும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், உள்ளூர் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளுக்கான வைப்புத் தொகை 70 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஹன்னா யோ கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.