ஷா ஆலாம், அக். 6 — கிள்ளான், ஜாலான் தெங்கு கிளானாவில் நடைபெறவுள்ள தீபாவளி சந்தைக்கான கடைத் தளங்களின் வாடகைக் கட்டணம் RM190-இலிருந்து தொடங்கும் என்று கிள்ளான் அரச நகராண்மைக் கழகம், MBDK தெரிவித்துள்ளது.
நகராண்மைக் கழகம் ஏற்க வேண்டிய பல்வேறு நிர்வாகச் செலவுகளை கருத்தில் கொண்டு தற்போதுள்ள வாடகைக் கட்டணத்தைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் MBDK உரிமத் துறை இயக்குநர் முகமட் இஸ்ஸாட் மொக்தார் தெரிவித்தார்.
மின்சாரச் செலவு, KDEB கழிவு மேலாண்மை நிறுவனம் மேற்கொள்ளும் தினசரி துப்புரவுப் பணிகளுக்கான செலவு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகச் செலவுகளை MBDK ஏற்க வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.
இதனிடையே, தேசிய வளமான ஒற்றுமை சங்கமான PPSK, கிள்ளான் தீபாவளி சந்தை கடைகளுக்கான வாடகைக் கட்டணத்தை 85 விழுக்காடு வரை குறைக்க வேண்டும் என்று MBDK-யிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
கோலாலம்பூர் மாநகராட்சி, DBKL இதேபோன்ற வாடகைக் குறைப்பை மேற்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி PPSK இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தது.
எனினும், நகராண்மைக் கழகத்தின் கீழ் செயல்படும் இரண்டு முக்கிய வர்த்தக சங்கங்களான Little India Small Traders Association மற்றும் Progressive Traders Association ஆகியவை இதுவரை இதுபோன்ற எதிர்ப்பையோ அல்லது வாடகைக் குறைப்புக்கான விண்ணப்பத்தையோ சமர்ப்பிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டுக்கான தீபாவளி சந்தை அக்டோபர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக மொத்தம் 142 கடைத் தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பங்களை அக்டோபர் 20ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.







